இந்தியாவை சீர்குலைக்க தடை செய்யப்பட்ட பி.எஃப்.ஐ. அமைப்புக்கு துருக்கி அதிபர் எர்டோகன் நிதியுதவி வழங்கி இருக்கும் தகவல் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (பி.எஃப்.ஐ.) மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது. உதாரணமாக, பயங்கரவாதத்துக்கு நிதி திரட்டுதல், இஸ்லாமிய இளைஞர்களை மூளைச்சலவை செய்து, ஆயுதப் பயிற்சி அளித்து, பயங்கரவாத செயல்களில் ஈடுபடுத்துவது, அல்கொய்தா போன்ற பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு வைத்துக் கொண்டு, நாட்டுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டுவது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து, நாடு முழுவதும் அதிரடி சோதனையில் ஈடுபட்ட தேசிய புலனாய்வு அமைப்பு, பி.எஃப்.ஐ. அமைப்பைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோரை கைது செய்தது. மேலும், அவர்களிடமிருந்து ஏராளமான ஆயுதங்கள், முக்கிய ஆவணங்கள், ஹவாலா பணப் பரிமாற்ற முயற்சி தொடர்பான ஆவணங்களை உள்ளிட்டவற்றை கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து, பி.எஃப்.ஐ. அமைப்புக்கு இந்தியாவில் 5 ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில்தான், பி.எஃப்.ஐ. அமைப்பு பயங்கரவாதத்துக்கு நிதி திரட்டியது உண்மை என்பதை மெய்ப்பிக்கும் வகையில், துருக்கி நாட்டிடம் இருந்து நிதியுதவி பெற்றது அம்பலமாகி இருக்கிறது. அதாவது, துருக்கி நாட்டின் அதிபர் எர்டோகன், இஸ்தான்புல் நகரில் செயல்பட்டு வரும் ஐ.எச்.எச். என்கிற அமைப்பு மூலம் பி.எஃப்.ஐ. அமைப்புக்கு நிதியுதவி வழங்கியதாக ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த நார்டிக் ரிசர்ச் மானிடரிங் என்கிற அமைப்பு தெரிவித்திருக்கிறது. இந்த ஐ.எச்.எச். என்கிற அமைப்புதான் சிரியாவில் இருக்கும் அல் கொய்தா பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்கள் சப்ளை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
துருக்கி நாட்டின் அதிபராக இருப்பவர் எர்டோகன். இவர், இந்தியா எதிர்ப்பு மனநிலை கொண்டவர். அடிக்கடி இந்தியாவுக்கு எதிராக கருத்துத் தெரிவித்து வரும் இவர், இந்தியாவுக்கு எதிராக இஸ்லாமிய நாடுகள் அனைத்தையும் ஒருங்கிணைக்க முயன்றவர். இவர்தான், துருக்கியின் நெருங்கிய நட்பு நாடானா கத்தார் தலைநகர் தோஹாவில் செயல்பட்டு வரும் ஐ.எச்.எச். அமைப்பின் கிளை வழியாக, பி.எஃப்.ஐ. அமைப்புக்கு நிதியுதவி வழங்கியதாகத் தெரிவித்திருக்கிறது. நார்டிக் ரிசர்ச் மானிடரிங் என்கிற அமைப்பு, உலகம் முழுவதிலும் செயல்பட்டு வரும் தீவிரவாத இயக்கங்களுக்கு செல்லும் நிதிகள் தொடர்பாக கண்காணிக்கும் அமைப்பாகும்.
அந்த அமைப்பின் அறிக்கையில், இந்தியாவை சீர்குலைக்கும் நோக்கில் இந்த நிதியுதவி வழங்கப்பட்டிருக்கிறது. இஸ்லாமிய நாடுகள் சவூதி அரேபியா நாட்டின் தலைமையின் கீழ் அணிதிரள்வதை தடுத்து, துருக்கியின் பின்னால் ஒன்று சேர வேண்டும் என்கிற நோக்கத்தில் எர்டோகன் செயல்பட்டு வருகிறார். அதனடிப்படையிலேயே பி.எஃப்.ஐ. அமைப்புக்கு நிதியுதவி வழங்கப்பட்டிருக்கிறது. இத்திட்டத்திற்கு அங்கார பிளான் என்று பெயரிடப்பட்டிருக்கிறது. நிதியுதவி பெறுவதற்காக இந்தியாவைச் சேர்ந்த பி.எஃப்.ஐ. அமைப்பின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர்கள் அப்துல் ரஹ்மான், பேராசிரியர் பி.கோயா ஆகியோர் இஸ்தான்புல் சென்று ஐ.எச்.எச். நிர்வாகிகளை சந்தித்தனர் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
துருக்கி அதிபர் எர்டோகன் இந்தியா மட்டுமல்ல கிறிஸ்தவ நாடுகளுக்கும் எதிரான மனநிலை கொண்டவர். துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இயங்கி வந்த கலாச்சார மற்றும் வரலாற்று தளமான ஹாகியா சோபியா கிறிஸ்தவ தேவாலயத்தை மசூதியாக அறிவித்தவர். உலகம் முழுவதிலுமுள்ள பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக எர்டோகன் செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு நிலவி வருகிறது. கடந்த 2016-ம் ஆண்டு துருக்கியில் ராணுவப் புரட்சி வெடித்தபோது, எர்டோகனுக்கு ஆதரவாக பி.எஃப்.ஐ. அமைப்பு அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. இத்தகவலை அடுத்து, தேசிய புலனாய்வு முகமை, இதேபோல வேறு எங்கிருந்தெல்லாாம் பி.எஃப்.ஐ. அமைப்புக்கு நிதியுதவி வந்தது என்பது குறித்து, தீவிர விசாரணையில் இறங்கி இருக்கிறது.