தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி இன்று (மே 6) காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டது. அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் அதன் இயக்குநர் சேதுராம வர்மா தேர்வு முடிவுகளை வெளியிட்டார். அதன்படி, மொத்தம் 94.56% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த 2023 ஆம் ஆண்டு 94.03% விகிதம் தேர்ச்சி பதிவாகியிருந்த நிலையில் இந்த ஆண்டு மொத்த தேர்ச்சி விகிதம் சற்றே அதிகரித்துள்ளது.
பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாணவிகள் 96.44%, மாணவர்கள் 92.37% தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல் மாணவர்களைவிட மாணவிகள் தேர்ச்சி விகிதம் அதிகம். பிளஸ் 2 பொதுத் தேர்வை எழுதிய மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார்.
இத்தேர்வில் 397 அரசுப் பள்ளிகள் முழு தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் 2478 பள்ளிகள் நூறு சதவீதத்தில் தேர்ச்சி பெற்றுள்ளது.
மேலும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் 97.45 தேர்ச்சி சதவீதத்துடன் மாநிலத்திலேயே முதலிடம் பிடித்து திருப்பூர் சாதனை படைத்துள்ளது. மேலும், அரசுப் பள்ளி அளவிலும் திருப்பூர் மாவட்டமே தேர்ச்சியில் முதலிடம் பெற்றுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் 23 ஆயிரத்து 849 மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். இதில் மாணவர்கள் 10,440 பேரும், மாணவிகள் 12 ஆயிரத்து 802 பேரும் என மொத்தம் 23 ஆயிரத்து 252 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.