கர்நாடகம், உ.பி மற்றும் மகாராஷ்டிரா மாநிலம் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு பிரிக்கப்பட வாய்ப்பு உள்ளது என கர்நாடக மாநில அமைச்சர் கூறியிருக்கிறார்.
கர்நாடகாவின் உணவு, சிவில் சப்ளை மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் வனத்துறை அமைச்சராக இருப்பவர் உமேஷ் கட்டி இரண்டு தினங்களுக்கு முன்பு பெலகாவி பார் அசோசியேஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் பேசியதாவது;
2024 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு கர்நாடகா 2 மாநிலங்களாகப் பிரிக்கப்படும் என்று எதிர்பார்க்கிறேன். பிரதமர் நரேந்திர மோடி புதிய மாநிலங்களை உருவாக்குவார். மகாராஷ்டிரா மூன்றாகவும், கர்நாடகா இரண்டாகவும், உத்தரபிரதேசம் 4 மாநிலங்களாகவும் மாறும் என்று இக்காணொளியில் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் 50 புதிய மாநிலங்கள் உருவாகும், வட கர்நாடகாவுக்குத் தனி மாநிலம் வேண்டும் என பா.ஜ.க குரல் கொடுக்கும். இந்த, விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியே நடவடிக்கை எடுப்பார். கர்நாடகம் முழுவதும் பரவியுள்ள மக்கள் தொகை அடிப்படையில் வட கர்நாடகம் தனி மாநிலமாக மாறும் என்பது உறுதி.
பெங்களூரு நகரத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. மக்களுக்கு போதிய தண்ணீர் வசதி இல்லை. பல மணிநேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. வட கர்நாடகாவுக்கு மிகப்பெரிய ஆற்றல் உள்ளது. வட கர்நாடகா மாநில கோரிக்கைக்கு மக்கள் கரம் கொடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
நிர்வாக வசதிக்காக தமிழகத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக தமிழகத்தில் ஒலித்து கொண்டு இருக்கிறது. அந்தவகையில், 50 புதிய மாநிலங்கள் உருவாகும் என்று கர்நாடக அமைச்சர் கூறியிருப்பதன் மூலம் தமிழகமும் இரண்டாக பிரிக்கப்படுமா? என்ற கேள்வியும் தற்பொழுது எழுந்துள்ளது.