பா.ம.க. போட்டியிடும் 10 தொகுதிகளில் காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய இரு தொகுதிகள் பட்டியல் சமூகங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. தலித் கட்சிகளைத் தவிர, திமுகவோ, அதிமுகவோ அல்லது வேறு எந்தக் கட்சியுமோ பட்டியலினத்தவருக்கு 20% பிரதிநிதித்துவம் வழங்கவில்லை என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர். ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக ராமதாஸ் எக்ஸ் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது :-
பா.ம.க. வேட்பாளர்களில் 30% மகளிர்; 20 விழுக்காட்டினர் பட்டியலினம்; இது தான் நாங்கள் விரும்பும் சமூகநீதி!
2024 மக்களவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடும் 10 தொகுதிகளின் வேட்பாளர்களில் சவுமியா அன்புமணி (தருமபுரி), கவிஞர் திலகபாமா (திண்டுக்கல்), ஜோதி வெங்கடேசன் ( காஞ்சிபுரம்) ஆகிய மூவர் பெண்கள். மொத்த தொகுதிகளில் 30% மகளிருக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. இது தான் மகளிருக்கு அதிகாரம் வழங்குதல், இது தான் சமூகநீதி.
தமிழ்நாட்டில் வேறு எந்தக் கட்சியும் மகளிருக்கு இந்த அளவுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கவில்லை. அதனால் தான் சொல்கிறோம் பாட்டாளி மக்கள் கட்சி தான் சமூகநீதிக் கட்சி என்று !
அதேபோல். பா.ம.க. போட்டியிடும் 10 தொகுதிகளில் காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய இரு தொகுதிகள் பட்டியல் சமூகங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. தலித் கட்சிகளைத் தவிர, திமுகவோ, அதிமுகவோ அல்லது வேறு எந்தக் கட்சியுமோ பட்டியலினத்தவருக்கு 20% பிரதிநிதித்துவம் வழங்கவில்லை. இது தமிழ்நாட்டின் மொத்த தொகுதிகளில் பட்டியலினத்தவருக்கு வழங்கப்பட்டுள்ள தனித் தொகுதிகளின் பிரதிநிதித்துவத்தை விட அதிகம் ஆகும். இது தான் பட்டியலினத்தவருக்கு அதிகாரம் வழங்குதல், இது தான் சமூகநீதி.
இதற்கு முன் 1999 மக்களவைத் தேர்தலில் 7 தொகுதிகளில் மட்டும் போட்டியிட்ட போதே சிதம்பரம், இராசிபுரம் ஆகிய இரு தொகுதிகளை, அதாவது 28.70% தொகுதிகளை பட்டியலினத்தவருக்கு ஒதுக்கிய வரலாறு பாட்டாளி மக்கள் கட்சிக்கு உண்டு. இது தான் நாங்கள் விரும்பும் சமூகநீதி!