‘மீ டூ’ சர்ச்சை நாயகி லீனா மணிமேகலை, ஹிந்துக் கடவுள் காளியை அவமதித்து சமூக வலைத்தளங்களில் போஸ்டர் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது சிவன், பார்வதி ஆகியோர் சிகரெட் பிடிப்பது போன்ற போட்டோக்களை வெளியிட்டு மீண்டும் புதிய சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.
தமிழகத்தின் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் லீனா மணிமேகலை. கவிஞர், திரைப்பட இயக்குனர், சமூக செயற்பாட்டாளர், ஆவணப் பட இயக்குனர் என பன்முகத் தன்மை கொண்டவர். இவர் இயக்கிய ‘செங்கடல்’, ‘மாடத்தி’ போன்ற படங்கள் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்தன. அதேபோல, இவரது கவிதைகளும் பல்வேறு தரப்பினரின் கவனத்தை ஈர்த்தவைதான். தற்போது ‘காளி’ என்கிற டாக்குமென்டரி படத்தை இயக்குவதோடு, தானே நடித்தும் இருக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்றை கடந்த இரு தினங்களுக்கு முன்பு வெளியிட்டார். அந்த போஸ்டரில் ‘காளி’ வேடம் போட்டிருக்கும் பெண், வாயில் சிகரெட்டை வைத்து புகைத்துக் கொண்டும், இரு கைகளில் திரிசூலம், அரிவாள் ஆகியவற்றோடு, மற்றொரு கையில் ஓரினச் சேர்க்கையாளர்களின் கொடியை வைத்திருப்பது போன்றும் இருந்தது. இதைப் பார்த்து விட்டு ஹிந்துக்களும், ஹிந்து அமைப்புகளும் கொந்தளித்து விட்டன.
காளியை ஹிந்துக்கள் கடவுளாகவும், காவல் தெய்வமாகவும் வணங்கி வரும் நிலையில், இப்படியொரு போஸ்டரை வெளியிட்டதால் ஹிந்துக்கள் கடும் ஆத்திரமடைந்தனர். ஆகவே, பல்வேறு தரப்பிலிருந்தும் லீலா மணிமேகலைக்கு கடுமையான எதிர்ப்புகள் எழுந்தன. மேலும், டெல்லி, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும், தமிழகத்தின் நெல்லை உள்ளிட்ட ஊர்களிலும் லீனா மணிமேகலை மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டன. அதோடு, ஹிந்து மதத்தை அவமானப்படுத்திய லீனாவை கைது செய்ய வலியுறுத்தி ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்தனர். தவிர, மேற்கண்ட போஸ்டரை நீக்காவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் ஹிந்து அமைப்புகள் எச்சரிக்கை விடுத்தன. எனினும், போஸ்டரை நீக்காத லீனா மணிமேகலை, தனது தரப்பு நியாயத்தையே சொல்லி வருகிறார். ஆனால், லீனாவின் காளி போஸ்டர் பதிவை ட்விட்டர் நிறுவனம் நேற்று இரவு நீக்கி விட்டது. சட்ட ரீதியான கோரிக்கையை ஏற்று, அப்பதிவு நீக்கப்படுவதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
இந்த நிலையில்தான், காளியைத் தொடர்ந்து சிவன் மற்றும் பார்வதி போல வேடமிட்ட இருவர் சிகரெட் பிடிக்கும் போட்டோவை வெளியிட்டிருக்கிறார் லீனா. அதோடு, ‛நாட்டுப்புற நாடகக் கலைஞர்கள் தங்கள் நிகழ்ச்சிகளை எப்படிப் பதிவு செய்கிறார்கள் என்பது பற்றி பா.ஜ.க. பணம் கொடுக்கும் ட்ரோல் ஆர்மிக்கு தெரியாது. இது என்னுடைய படம் அல்ல. அன்றாட கிராமப்புற இந்தியாவில் இருந்து வருகிறது. இந்த சங்பரிவாரங்கள் தங்கள் இடைவிடாத வெறுப்பு மற்றும் மத வெறியால் அழிக்க நினைக்கிறார்கள். ஹிந்துத்துவா ஒருபோதும் இந்தியாவாக முடியாது’ என்று குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், லீனாவின் இக்கருத்துக்கு பலரும் எதிர் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். ‘இந்தியா என்றாலே ஹிந்துத்துவாதான். இதே மாதிரி கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், இஸ்லாமியர்களுக்கு எதிராக உங்களால் வீடியோ வெளியிட முடியுமா? அப்படிச் செய்தால் அதற்கு உலகத்தின் ரியாக்ஷன் எப்படி இருக்கும் என்பதை பாருங்கள். இந்த உலகில் உள்ள மக்களின் உண்மையான மதச்சார்பின்மை உணர்வைக் கண்டறிய அதை செய்யுங்கள் பார்க்கலாம்” என்று பதில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
இந்த லீனா மணிமேகலை ஒரு ஓரினச் சேர்க்கையாளர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தமிழ் திரைப்படப் பாடகி சின்மயி, திரையுலகினர் மீது ‘மீ டு’ குற்றச்சாட்டை சுமத்தியபோது, இவரும் இயக்குனர் சுசி கணேசன் மீது குற்றம்சுமத்தினர். இதனால் ஆத்திரமடைந்த சுசி கணேசன், லீனா மணிமேகலை மற்றும் சின்மயி மீது சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்குக்கு பயந்து கனடா நாட்டுக்குத் தப்பிச் சென்று விட்டார். மேலும், சமூக வலைத்தளங்கள் மூலம் சுசி கணேசனுக்கு எதிராக கருத்துக்களை பதிவு செய்து வந்தார். இதனால், 1.10 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் சுசி கணேசன். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், லீனா மணிமேகலைக்கு கண்டனம் தெரிவித்து நீதிமன்றம், வருகிற 21-ம் தேதிக்கு விசாரணையை ஒத்தி வைத்திருக்கிறது.