முத்தையா… நாராயணன்… கண்ணதாசன்..!

முத்தையா… நாராயணன்… கண்ணதாசன்..!

Share it if you like it

இன்று கண்ணதாசனின் பிறந்தநாள்.

காரைக்குடி அருகே சிறுகூடல்பட்டியில் சாத்தப்பன் செட்டியார் – விசாலாக்ஷி ஆச்சி தம்பதியருக்கு 1927 ஜூன் 24-ம் தேதி முத்தையா பிறந்தார். இந்த தம்பதிக்கு 10 குழந்தைகள் இருந்ததால், குழந்தை இல்லா பழனியப்ப செட்டியார் – சிகப்பி ஆச்சி தம்பதிக்கு முத்தையாவை சுவீகாரம் கொடுத்து விட்டனர். இவர்கள் முத்தையாவுக்கு, நாராயணன் என்று பெயர் சூட்டினர். இவர் 8-ம் வகுப்பு வரை மட்டுமே பள்ளிக்கூடம் சென்றார். பள்ளிப் பருவத்திலேயே படிப்பதிலும் எழுதுவதிலும் ஆர்வம் மிகையாக இருந்தது. ஆகவே, கதாசிரியராக வேண்டும் என்று கனவு கொண்டார். இதை நனவாக்க தனது 16-வது வயதில் வீட்டிற்கு தெரிவிக்காமல் சென்னை வந்தார்.

அங்கு சந்திரசேகரன் என்கிற புனைப்பெயர் வைத்துக்கொண்டு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புத் தேடினார். ஆனால், பலன் கிடைக்காததால் ஒரு நிறுவனத்தில் சேர்ந்து வேலை செய்துகொண்டே எழுதத் தொடங்கினார். அவரது முதல் கதை கிரகலட்சுமி என்ற பத்திரிகையில் ”நிலவொளியிலே” என்கிற தலைப்பில வெளிவந்தது. இது அவருக்கு ஊக்கமாக அமைய இன்னும் மும்முரமாக எழுதத் தொடங்கினார். இளம் பருவத்தில் திராவிட சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு நாத்திகனாக மாறினார் முத்தையா. எனினும், தமிழ் மொழி மற்றும் தமிழ் கலாசாரத்தின் மீதிருந்த பற்று காரணமாக தமிழ் இலக்கியம், உரைநடை மற்றும் கவிதை ஆகியவற்றில் சிறந்து விளங்கச் செய்தார்.

இவர் ஒருமுறை ஆண்டாளின் திருப்பாவையைப் படித்து, அதன் மாயக் கவிதையைக் கண்டு வியந்தார். அப்போது அவருக்கு கண்ணன் மீது ஏற்பட்ட அன்பு வாழ்க்கை முழுவதும் நீடித்தது. இந்த காலகட்டத்தில் ஒரு நண்பரின் பரிந்துரையோடு, புதுக்கோட்டையில் இருந்து வெளிவந்த ‘திருமகள்’ என்ற பத்திரிகையில், ‘பிழை திருத்துனர்’ வேலைக்கு விண்ணப்பித்தார். நேர்க்காணலில், பத்திரிகையின் அதிபர், “உங்கள் பெயரென்ன?” என்று கேட்டார். அந்த நொடியில் முத்தையா தனது பெயரை “கண்ணதாசன்” என்று சொன்னார். கண்ணனைப்போலவே தனது பெற்றோர்களுக்கு 8-வது குழந்தையாக பிறந்த முத்தையா, கண்ணதாசனாக மாறியது இந்த தருணத்தில்தான்.

பத்திரிகை அதிபர் கண்ணதாசனின் திறமையைக் கண்டு, ஒருநாள் இதழுக்கு தலையங்கம் எழுதச் சொன்னார். இந்திய தேசிய ராணுவம் பற்றி அவர் எழுதிய தலையங்கம், அவரை பெரிதும் கவர, அப்பத்திரிகையின் ஆசிரியராக பணி அமர்த்தப்பட்டார் கண்ணதாசன். அப்போது அவருக்கு வயது 17. இதன் பிறகு, திரை ஒலி, சண்டமாருதம், தென்றல் திரை உள்ளிட்ட பல பத்திரிகைகளில் பணியாற்றினார். மேலும், கண்ணதாசன் என்கிற பெயரில் அவரே பத்திரிகையையும் நடத்தினார். அனைத்து பத்திரிகைகளிலும் அவரது கவிதைகள், கதைகள், கட்டுரைகள் மற்றும் நாடகங்கள் வெளிவந்தன.

அவரது கவிதைகளுக்கென்று ஒரு அடையாளம் அமைந்துவர, கண்ணதாசனுக்கு திரைப்படங்களுக்கு பாடல் எழுத வேண்டும் என்கிற எண்ணம் ஏற்பட்டது. மாடர்ன் தியேட்டர்ஸ் கதை இலாகாவில் கண்ணதாசனும் சேர்க்கப்பட்டார். ஜூபிடர் நிறுவன தயாரிப்பில், ‘கன்னியின் காதலி’ படத்தில் கே. ராம்நாத் பாடல் எழுத வாய்ப்பு கொடுத்தார். ‘கலங்காதிரு மனமே’ என்ற பாடல் கண்ணதாசனின் முதல் திரைப்பட பாடல். இதன் பிறகு, கதை, வசனம், தயாரிப்பு என சகல துறைகளிலும் இயங்கினார். ஸ்.பி.முத்துராமன், பஞ்சு அருணாச்சலம் போன்ற திரையுலகில் பிற்காலத்தில் பிரபலமான பலர் இவரிடம் பணிபுரிந்தவர்கள்தான்.

அடுத்த 30 ஆண்டுகளுக்கு கண்ணதாசன் கிட்டத்தட்ட 5,000 பாடல்களை அளித்து தமிழ்த் திரைப்பட பாடல் அரங்கை ஆளுமை செய்தார், இதை தவிர, நாவல்கள், காவியங்கள், நாடகங்கள், கட்டுரைகள் உட்பட 6,000 கவிதைகள் மற்றும் 232 புத்தகங்களையும் எழுதியுள்ளார். கம்பரின் அபிமானியாக கண்ணதாசன் கம்பரின் கலைத்திறனைப் பாராட்டி பல கவிதைகளை எழுதினார். (சி.என் அண்ணாதுரை எழுதிய ‘கம்பரசம்’ என்ற நையாண்டிக்கு மாறாக.) மேலும், காரைமுத்துப் புலவர், வணங்காமுடி, காமகப்ரியா, பார்வதிநாதன், ஆரோக்கிய சுவாமி என பல்வேறு புனைப்பெயர்களில் எழுதினார்.

கண்ணதாசனின் பல கவிதைகள் பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. கண்ணதாசன் 1980-ம் ஆண்டு தனது ‘சேரமான் காதலி’ நாவலுக்காக சாகித்ய அகாடமி விருதை வென்றார். 1969-ம் ஆண்டு ‘குழந்தைக்காக’ திரைப்படத்திற்காக வழங்கப்பட்ட சிறந்த பாடலுக்கான தேசிய திரைப்பட விருதைப் பெற்ற முதல் நபராவார். 1978-ல் கண்ணதாசனுக்கு தமிழக அரசு ‘கவிஞர் விருது’ அளித்தது. அரசு அவரது சொந்த ஊரான காரைக்குடியில் நூலகத்துடன் நினைவிடமும் அமைத்தது.

தீர்க்க சிந்தனைகொண்ட கண்ணதாசன், நாத்திகத்தின் அர்த்தமின்மையை உணர்ந்து மீண்டும் ஆத்திகராக மாறினார். அவருடைய சுய பிரயாணத்தையும் அனுபவங்களையும் ஆதாரமாக கொண்டு ஹிந்து மத தத்துவங்களை எளிமையான தமிழில் எழுதி ‘அர்த்தமுள்ள இந்து மதம்’ என்ற தலைப்பில் 10 புத்தகங்களாக 1973-ல் வெளியிட்டார். மேலும், ‘வனவாசம்’ மற்றும் ‘மனவாசம்’ என்ற தலைப்பில் 2 சுயசரிதைகளை எழுதினார்; முந்தையது, திராவிட முன்னேற்றக் கழகத்தில் நாத்திகராக இருந்தபோது அவரது வாழ்க்கையைப் பற்றிய புத்தகம், பிந்தையது, அவர் தி.மு.க.விலிருந்து விலகிய பிறகு அவரது வாழ்க்கையைப் பற்றியதாகும்.

கண்ணதாசனுக்கு பொன்னம்மா, பார்வதி, வள்ளியம்மை என்று 3 மனைவியர். இவர்களின் மூலம் 15 குழந்தைகள். துரதிருஷ்டவசமாக கண்ணதாசன் குடிக்கும், போதை வஸ்துகளுக்கும் அடிமையானார். அதோடு, திரையுலகை நம்பி சில தவறுதலான பண முதலீடுகளை செய்தார். இவை எல்லாம் ஒன்று சேர்ந்து அவரை வாட்டி எடுத்தன. 1981-ம் ஆண்டு அக்டோபர் 16-ம் தேதி கண்ணதாசன் தனது 54வது வயதில் ஒரு சர்வதேச கவிஞர்கள் மாநாட்டிற்கு அமெரிக்கா சென்றிருந்தபோது உயிரிழந்தார். அவரின் அகால மறைவு தமிழ் மக்களை ஆழ்ந்த சோகத்தில் மூழ்க்கியது. இன்றும் ‘புத்தியுள்ள மனிதரெல்லாம்…’, ‘அதோ அந்த பறவை போல…’, ‘பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது…’ போன்ற பாடல்கள் கேட்பவரின் உள்ளதை அதிலுள்ள அனுபவரீதியாக தத்துவதினால் கவர்கின்றன.

கட்டுரையாளர்: யமுனா ஹர்ஷவர்தனா


Share it if you like it