இந்தியாவின் முன்னாள் பிரதமரும் பாரத ரத்னா விருது பெற்றவருமான அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் 6 வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
பாஜக-வின் முன்னோடியும், வலது சாரி சித்தாந்தங்களைக் கொண்டிருந்த அரசியல் கட்சியுமான பாரதிய ஜன சங்கத்தின் முக்கியத் தலைவராக அப்போது செயல்பட்டு வந்த வாஜ்பாய், ஆர்.எஸ்.எஸ். உறுப்பினராகவும் செயல்பட்டு வந்தார்.
கூட்டணி அரசுடன் 1999 முதல் 2004 வரை 5 ஆண்டுகள் இந்தியாவின் பிரதமராக பதவி வகித்தார். இவர் கவிதை எழுதுவதிலும் வல்லவர் என்று கூறப்படுகிறது. 1975 பிரதமராக இருந்த இந்திராகாந்தி எமர்ஜென்சியை அறிவித்தபோது பல அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதில் குறிப்பாக வாஜ்பாயும் ஒருவராக இருந்தார். வாஜ்பாய் சிறையில் இருந்த போது கவிதைகள் எழுதி வந்ததாக கூறப்படுகிறது.
இந்திராகாந்தி அறிவித்த எமர்ஜென்சியினால் மக்கள் அனைவரும் கடும் இன்னல்களுக்கு ஆளாகினர். இதனால் இந்திராகாந்தி மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர். இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்ட வாஜ்பாய், ஓராண்டில் அனைவரையும் ஒருங்கிணைத்து, ஜனசங்கம் உள்ளிட்ட நான்கு கட்சிகளின் கூட்டணியுடன், ஜனதா கட்சி 1977 தேர்தலில் 542 தொகுதிகளில் 298 இடங்களை ஜனதா கட்சி கைப்பற்றி, இந்திரா காந்திக்கு மாபெரும் பரிசாக கொடுத்தார்.
ஜனதா கட்சியின் புகழ் மிக்க நபர் என அவரை ஊடகங்கள் வர்ணித்தன. “வாஜ்பாய் இந்தியாவின் பெருமை” என பிரசார ஏடுகளில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்து தேசியவாத அரசியலை உருவாக்குவதில் வாஜ்பாய் பெரும் பங்கு வகித்துள்ளார். அந்த காலக்கட்டத்தில் அவர், பசு பாதுகாப்பு, இந்து குடும்ப சட்டம், உலக நாடுகளுடனான இந்தியாவின் உறவுமுறைகள் மற்றும் இந்து மதம் குறித்து ஏராளமான கட்டுரைகளை எழுதியுள்ளார்.
வாஜ்பாயின் இறுதி தருவாயில் ஒரு கவிதையில், “மாலை மயங்கும் வேளையில், எனது வாழ்க்கையின் சூரியன் அஸ்தமித்துவிட்டான். எல்லாச் சொற்களும் பொருளற்ற சொற்களாகவே காணப்படுகின்றன. ஒரு காலத்தில் இனிய இசையாகத் தெரிந்தது, தற்போது தெளிவற்ற இரைச்சலாகத் தெரிகிறது,” என எழுதினார்.
2018ஆம் ஆண்டில் தமது 93வது வயதில் வாஜ்பாய் காலமானார். அரசியியலிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் மாபெரும் சிறந்த தலைவராகவும், சிறந்த மனிதராகவும் திகழ்ந்துள்ளார்.
1964 ல் சீனா அணு ஆயுத சோதனையை வெற்றிகரமாக நடத்தி தன்னை அணு ஆயுத வல்லமை பெற்ற நாடாக அறிவித்தது. தனது அண்டை நாடான சீனா அணு ஆயுத நாடாக அறிவித்ததில் இந்தியாவுக்கு நெருக்கடிகள் ஏற்படலாம் என கணித்த வாஜ்பாய் அவர்கள் அணுகுண்டு சோதனை நடத்த வேண்டும் என்று கலாம் அவர்களுடன் ஆலோசித்து அமெரிக்காவுக்கு தெரியாமல், மே 11 மற்றும் மே 13, 1998 இல், முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையில் ராஜஸ்தானின் பொக்ரானில் ஐந்து அணுகுண்டு சோதனைகள் நடத்தி இந்தியா ஒரு வெற்றிக் கதையை எழுதியது.
இந்தச் சோதனைகள் மேற்கத்திய உலகை அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியது.
சோதனைகளுக்குப் பிறகு இந்தியா ஒரு புதிய அடையாளத்தைப் பெற்றது. இருப்பினும், அமெரிக்காவால் பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டன.
எதற்கும் தயங்காத வாஜ்பாய், அவர்கள் இரண்டு நாட்களுக்குப் பிறகு அடுத்த சுற்று அணுசக்தி சோதனைகளைத் தொடர்ந்தார்.
அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி அவரது நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் பதிவில்,
தேசத்தைக் கட்டியெழுப்புவதில் அவர் ஆற்றிய ஈடு இணையற்ற பங்களிப்பிற்காக எண்ணற்ற மக்களால் நினைவுகூரப்படுகிறார். நமது சக குடிமக்கள் சிறந்த வாழ்க்கைத் தரத்தை நடத்துவதை உறுதி செய்வதில் அவர் தனது முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்தார். இந்தியாவுக்கான அவரது தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்ற தொடர்ந்து பாடுபடுவோம். இவ்வாறு பதிவிட்டுள்ளார்.