மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.இந்தநிலையில் கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் மேற்கு வங்க மாநிலத்தையே உலுக்கியது. கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இரண்டாம் ஆண்டு முதுகலை பயின்று வந்த அந்த மாணவி பயிற்சி மருத்துவராக பணியில் இருந்து வந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று கல்லூரி வளாகத்தில் உள்ள கருத்தரங்கு அறையில் கற்பழிக்கப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க போலீஸ் தேடுதல் வேட்டையில் இறங்கிய நிலையில், கொல்கத்தா காவல்துறையோடு பணிபுரிந்த தன்னார்வலர் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். பயிற்சி பெண் மருத்துவரின் இக்கொடூர கொலையை கண்டித்து நாடு முழுவதும் மருத்துவம் படிக்கும் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த கொலை சம்பவத்திற்கு நீதி கேட்டு மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி போராட்டம் நடத்த, அறந்தாங்கியை சேர்ந்த பாஜக மகளிர் அணி மாநில பொதுச் செயலாளர் கவிதா ஸ்ரீகாந்த் திட்டமிட்டுள்ளார். ஆனால் அவரை போராட்டம் நடத்தக்கூடாதென காவல் துறையினர் நள்ளிரவில் கவிதா அவர்களின் வீட்டிற்கு சென்று சம்மன் கொடுக்க முயன்றதாகவும், அந்த சம்மனை கவிதா வாங்க மறுத்ததால், காவல் துறையினர் கவிதா அவர்களின் வீட்டின் சுவரில் சம்மனை வலுக்கட்டாயமாக ஒட்டி சென்றுள்ளனர். இதுதொடர்பான சிசிடிசி காட்சிகளை கவிதா அவர்கள் எக்ஸ் பதிவில் பதிவிட்டுள்ளார். கொலை செய்யப்பட்ட பெண்ணுக்காக போராடுவது தவறா? திமுக அரசின் கைபாவையாக காவல் துறையினர் செயல்பட்டு வருவதாக பாஜக மகளிர் அணி மாநில பொதுச் செயலாளர் கவிதா அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நள்ளிரவில் பாஜக பெண் நிர்வாகியின் வீட்டிற்கு காவல் துறையினர் எவ்வாறு செல்லலாம் ? இதைத்தான் நமது அரசியலமைப்பு சட்டம் சொல்கிறதா ? திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லையா ? இவ்வாறு சமூக ஆர்வலர்கள் திமுக அரசிற்கு கேள்வி எழுப்பி வருகின்றனர்.பாஜக தலைவர்கள் காவல் துறையினரின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.