தமிழகத்திற்கும் ராமருக்கும் சம்பந்தமில்லை என்று சொல்லும் அரசியல்வாதிகள் இங்கே தீர்த்தமலை கோவிலுக்கு வர வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக அண்ணாமலை X தளத்தில் குறிப்பிட்டிருப்பதாவது :-
கடந்த 2014 ஆம் ஆண்டு, பாரதப் பிரதமராக மோடி அவர்கள் பொறுப்பேற்றபோது, நமது நாட்டில் தனிநபர் சராசரி வருமானம் ரூ.86,000 ஆக இருந்தது. தற்போது, ரூ.1,96,000 ஆக உயர்ந்துள்ளது. உலகில் 11 ஆவது பெரிய பொருளாதார நாடாக இருந்த நமது நாடு, தற்போது உலகில் 5 ஆவது பெரிய பொருளாதார நாடாக முன்னேறியிருக்கிறது. உலக அரங்கில் நமது நாட்டின் மதிப்பு உயர்ந்துள்ளது. மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் ஆட்சி, விவசாயிகளை, இளைஞர்களை, பெண்களை, ஏழை எளிய மக்களை முன்னேற்ற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் நடந்து கொண்டிருக்கிறது. ஒரு ரூபாய் கூட லஞ்சம், ஊழல் இல்லாத நல்லாட்சி நடைபெறுகிறது.
ஆனால், தருமபுரி மாவட்டத்தில் இத்தனை ஆண்டுகளாக ஜாதி அரசியல் செய்து, தமிழகத்தில் பின் தங்கிய மாவட்டங்களில் ஒன்றாக வைத்திருக்கிறார்கள். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. தருமபுரி மக்கள் வேலைவாய்ப்புக்காக நாடு முழுவதும் பல இடங்களுக்குச் செல்கிறார்கள். ஆனால், தருமபுரி மாவட்டத்தில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தொழிற்சாலைகள் இல்லை.
பின்தங்கிய மாநிலம் என்று திமுகவினர் கூறும் பீகாரின் பல மாவட்டங்களை விட, தருமபுரி பின்தங்கி உள்ளது. ஆனால், இது குறித்த எந்தக் கவலையும் இன்றி, வட மாநில மக்களை அவதூறாகப் பேசி, மன்னிப்பு கேட்டுக் கொண்டிருக்கிறார் தருமபுரி பாராளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார். தருமபுரி மக்களை தேசிய அளவில் அவமானப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
தமிழகத்திற்கும் ராமருக்கும் சம்பந்தமில்லை என்று சொல்லும் அரசியல்வாதிகள் இங்கே தீர்த்தமலை கோவிலுக்கு வர வேண்டும். ராமபிரான் சிவபெருமானை இரண்டு இடங்களில் பிரதிஷ்டை செய்து சிவபூஜை செய்துள்ளார். அதில் ஒன்று பெருஞ்சிறப்பு பெற்ற ராமேஸ்வரம், மற்றொன்று தீர்த்தங்கள் நிறைந்த தீர்த்தகிரி. ராமபிரானை வேண்டிக்கொண்டு இங்குள்ள தீர்த்தக் குளத்தில் ராமஜெயம் என்று சொல்லி நீராடினால் புண்ணியம் கிடைக்கும் என்று சொல்வார்கள். அயோத்தி ராமர் கோவிலில் ஜனவரி 22 அன்று நடக்கவிருக்கும் கும்பாபிஷேகம், ராமர் வழிபட்ட அரூர் கோவிலுக்கும் நடப்பதாகத்தான் பொருள்.