பொள்ளாச்சி நா மஹாலிங்கம்

பொள்ளாச்சி நா மஹாலிங்கம்

Share it if you like it

பொள்ளாச்சியில் உள்ள சோமந்தராய்ச்சித்தூர் கிராமத்தில் 1923 மார்ச் 21ம் தேதி நாச்சிமுத்து கவுண்டர் – ருக்மிணி  தம்பதியருக்கு பிறந்தார்  அருட்செல்வர் நா மஹாலிங்கம்.

வசதிவாய்ந்த குடும்பத்தில் பிறந்திருந்தாலும் தன் பெற்றோரின் தர்மநெறி வழிக்காட்டுதலினால் எளிமையான வாழ்க்கையையே கடைபிடித்தார் மஹாலிங்கம். ‘எளிய வாழ்க்கையும் உயர்ந்த சிந்தனையும்’ என்ற கொள்கையை கடைபிடித்த அவர் சக்திவாய்ந்த ஆளுமை உடையவராக இருந்தார்.

விடுதலை போராட்டம் உச்சகட்டத்தை அடைந்திருந்த காலம், இளைய மஹாலிங்கத்துக்கு அரசியலில் இறங்கவேண்டும் என்ற ஆர்வம் இருந்தது ஆனால் அவர் தந்தை “படிப்பு முடித்த பிறகுதான்” என்ற கட்டளை இட்டுவிட்டார். அவர் இயற்பியலில் இளநிலை பட்டம் லயோலா கல்லூரியிலிருந்தும் இயந்திர பொறியிலலில் முதுநிலை பட்டம் கிண்டி பொறியியல் கல்லூரியிலிருந்தும் பெற்றார்.

மரியம்மாளை 1945 ல்  மணமுடிந்தார்.  அவர்கள் கருணாம்பாள் என்ற மகளையும் மாணிக்கம், பாலசுப்ரமணியன் மற்றும் ஸ்ரீனிவாசன் என்ற மூன்று மகன்களையும் பெற்றேடுத்தனர். அவர்களுடைய பெரிய கூட்டுக் குடும்பத்தை சாமர்த்தியமாக நடத்தி வந்தனர். மாரியம்மாள் கடமையும் அன்பும் மிக்கவள். அவர் குழந்தைகளை குடும்ப பாரம்பரியத்தை ஊட்டி வளர்த்தார்.

மஹாலிங்கம் பொள்ளாச்சி நகராட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு நகரத்திற்கு மின்சாரம், சாலைகள், தண்ணீர் வசதி மற்றும் சுகாதாரம் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை  மேம்படுத்தினார். அவர் விவசாயத்தை விட்டு தொழிலதிபராக ஆனார். ஆனைமலை பஸ் டிரான்ஸ்போர்ட் (ABT) ஐ தொடங்கினார். பின்னர் அரசியலில் நுழைந்து 1949 ல் கோவை இளைஞர் காங்கிரஸின் ஒருங்கிணைப்பாளராக பணிபுரிந்தார்.

1952 இல் பொள்ளாச்சி தொகுதியில் இருந்து சென்னை மாநில சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப் பட்டார். பதினைந்து ஆண்டுகள் மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றிய காலத்தில் அவர் தனது தொகுதிக்காக செய்த தொண்டுகள்     இன்றுவரை ஒப்பிட முடியாத சாதனைக்குரியவை ஆகும். நெறிமுறைகள் இல்லாத அரசியலில் அர்த்தம் இல்லை என்ற கொள்கை கொண்ட அவர், சந்தர்ப்பவாத அரசியலில் ஈடுபடவில்லை. நான்கு லட்சம் ஏக்கர் பரப்பளவில் வறட்சி நிலத்தில் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தை செயல்படுத்துவதற்கு அவர் மூலக்கருவியாக இருந்தார். இதன் மூலம் ஐந்து லட்ச விவசாய குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கு புத்துயிர் கிடைத்தது. அரசியல் மக்களுக்கு சேவை செய்ய கடவுள் கொடுத்த வாய்ப்பு என்று நம்பினார்.

தேசியவாதியான மஹாலிங்கம் சிந்தனையிலும் திட்டம் தீட்டுவதிலும் கூர்மை கொண்டவர்.  சட்டசபையில் அவர் ஆக்கப்பூர்வ விமர்சனம் செய்வதை மற்ற  உறுப்பினர்கள் மிகுந்த கவனத்துடன் செவிகொடுத்தனர். அரசியல் தீர்க்கதரிசி. காந்திய முறைகளில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட அவர், தொழில்மயமாக்கல் மற்றும் நவீனமயமாக்கல் இரண்டுமே ஒன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தார். சிறு தொழில்களை வளர்த்தால்தான் பொருளாதார வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கும் என்று நம்பினார்.

அவர் தனது நேரத்தை அரசியலுக்கும் வணிகத்திற்கும் இடையில் விவேகத்துடன் பிரித்து செயல் பட்டார். அவர் தனது அரசியல் செல்வாக்கை தொழில் செய்வதற்காக பயன்படுத்தவில்லை.

அவர் 1969ல் அரசியலைத் துறந்து, குடும்பத் தொழிலில் கவனம் செலுத்த திரும்பி சக்தி குழும நிறுவனங்களில் முழு நேரமாக பணியாற்றத் தொடங்கினார். ABT பார்சல் செர்விசெஸ், சக்தி சுகர்ஸ், சக்தி சோயா என பல நிறுவனங்களை 20 ஆண்டுகளுக்குள் அவர் துவக்கி பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு வலை வாய்ப்பும் வாழ்க்கை வசதிகளையும் ஏற்படுத்த காரணம்மாக இருந்தார். அவரது வணிக சாதுரியம் மற்றும் சமூக தத்துவத்தை ஒன்று கொண்டுவரும் விதமாக இருந்த சக்தி சுகர்ஸ் குழும நிறுவனங்களின் மகுடத்தில் ஜொலிக்கும் ரத்தினமாக திகழ்ந்தது. பருவகால பயிராக கருதப்பட்ட கரும்பை ஆண்டு முழுவதும் விளைவிக்க முடியும் என்பதை விஞ்ஞானிகளின் உதவியுடன் நிரூபித்ததன் மூலம் விவசாயிகள் கரும்பு அறுவடை பெருக்கி மாபெரும் பயனடைந்தனர். சக்தியின் பெயர் வீட்டுக்கு வீடு பரவ, அதன் வருமானமும் உயர்ந்தது.

புலமை மிக்க அறிஞராகிய மஹாலிங்கம் நவீன அறிவியல், தத்துவம், ஆன்மீகம், கட்டிடக் கலை, விவசாயம், தமிழ் இலக்கியம், வானியல், பொருளாதாரம், மருத்துவக் கல்வி, இசை என பல்துறை மேதையாகவும் ஆளுமை கொண்டவர். ஏராளமான புத்தகங்களைப் ஆர்வத்துடன் படித்த அவர்,  அவற்றை தனது நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் இலவசமாக விநியோகித்தார். அவர் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் அறிஞர்களுக்கு உதவியதோடு, நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் கோவில் திருப்பணிக்கு தாராளமான நன்கொடைகளை வழங்கினார்.  பள்ளி நாட்களிலிருந்தே சமஸ்கிருதத்தைப் படிப்பதில் மிகுந்த ஆர்வத்தை வெளிப்படுத்தினார், மேலும் தேசத்தின் அதிகார பூர்வ மொழியாக அதை ஆக்க வேண்டும் என்றார். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பல நூல்களையும், பொது நலன் சார்ந்த பல கட்டுரைகளையும் எழுதியுள்ளார். மேலும் இவர் பல கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளை நிறுவிய கல்வியாளர்.

ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவத்தில் ஆர்வம் காட்டியதுடன்  தூய சைவ உணவு மட்டுமே உண்டு காதி உடைகள் மட்டுமே அணிந்தார்.

விளையாட்டு  பிரியரான அவர் சதுரங்கம் ஆடினார். இன்று உலகளவில் மாபெரும் சதுரங்க வீரர்களில் ஒருவரான  விஸ்வநாதன் ஆனந்தின் திறமையைக் கண்டறிவதில் அவர் முக்கிய பங்கு வகித்தார். அவர் ஒரு கலை ஆர்வலராகவும் இருந்து இசை மற்றும் நடன கலைஞர்களை ஊக்குவித்தார்.

2003ல் காஞ்சி ஜகத்குரு ஸ்ரீ சங்கராச்சாரியார் ‘முத்தமிழ் சேவா ரத்னா’ என்ற பட்டம் சூட்டினார். அவரை 70 களில் மற்றும் 80 களில் மாநில திட்டக்குழு உறுப்பினராக தமிழக அரசு நியமித்தது.

இயற்கையான ஆன்மீக போக்கு கொண்ட மஹாலிங்கம் உயர்ந்த தார்மீக நெறிமுறைகளை கடைபிடித்தார். அவர் 1999 ல் ஜோர்டானில் நடைபெற்ற மதம் மற்றும் அமைதி குறித்த உலக மாநாட்டில் பங்கேற்று அங்கிருந்த மத தலைவர்களை தங்கள் மக்களை ஒன்றிணைத்து உலக அமைதிக்காக பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக் கொண்டார். வள்ளலாரின் உபதேசங்களை பின்பற்றிய அவர், ஜோதி வழிபாட்டைப் பிரபலப்படுத்தினார், அவர் உலகம் முழுவதும் பின்பற்றப்படும்  ஜோதி வழிபாட்டின் ஒருங்கிணைக்கும் சக்தியைக் உணர்ந்தார். ஆழியாறில் தத்துவஞானி வேதாத்திரி மகரிஷியின் ஆசிரமத்தை கட்டினார்.

திரு மகாலிங்கத்திற்கு 2000 ஆம் ஆண்டு ஆழ்வார்கள் இலக்கிய ஆராய்ச்சி மையம் ராமானுஜர் விருது வழங்கியது. அவர் செய்த தொண்டுகளை ஆமோதிக்கும்விதமாக ‘அறம் வளர்க்கும் அண்ணல்’ பட்டம் காஞ்சி ஸ்ரீ சங்கராச்சாரியாரால் வழங்கப்பட்டது, ஸ்ரீ கிருபானந்த வாரியார் ‘அருட்ச்செல்வர்’ என்ற பட்டம் சூட்டினார், மேலும் பல பல பட்டங்களை  பல்வேறு மடாதிபதிகளிடமிருந்து பெற்றார்.

இந்திய அரசு இவருக்கு 2007 ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருது வழங்கி கவுரவித்தது.

டாக்டர் அப்துல் கலாம் தனிப்பட்ட உரையாடலின் போது, அடுத்து என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்று கேட்டதற்கு, 80 வயதாகிய அருட்செல்வர் நா மகாலிங்கம், சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட தமிழ் எழுத்துக்களை ஆய்வு செய்ய விரும்புவதாக பதிலளித்து டாக்டர் அப்துல் கலாமை வியக்க செய்தார்.

பணிவான, மென்மையாக பேசுபவராக இருந்தாலும் தரம் மற்றும் கடின உழைப்பு என்று வரும்போது தீவிரமானவராக இருந்தார். இன்றும் அவரை அனுதாபம் மற்றும் மனிதாபிமானத்திற்காக மக்கள்  நினைவில் கொண்டுள்ளனர்.

‘தீர்க்கதரிசிகளுக்கு வயதில்லை’ என்ற கோட்பாட்டை நம்பிய   அற்புதமான முன்மாதிரியும் இளைய தலைமுறையினருக்கு வழிகாட்டியாக திகழ்ந்த இந்த காந்தியவாதி  2014 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி தன் உடலை விட்டு ஜோதியுடன் ஒன்றிணைந்தார்.


Share it if you like it