புதுச்சேரியில் வெடிகுண்டு வீசியும், கத்தியால் வெட்டியும் பா.ஜ.க. நிர்வாகி படுகொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பாண்டிச்சேரி மங்களம் தொகுதியின் பா.ஜ.க. மாவட்ட பொறுப்பாளராக இருந்தவர் செந்தில்குமரன். வில்லியனூர் கனுவாப்பேட்டை பகுதியில் வசித்து வந்த இவர், புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் தீவிர ஆதரவாளராவார். இவர், நேற்று இரவு வில்லியனூர் பகுதியில் தனது வீட்டுக்கு அருகேயுள்ள பேக்கரியுடன் கூடிய டீக்கடையில் நின்று பேசிக் கொண்டிருந்தார். இரவு சுமார் 9 மணியளவில் அங்கு வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல், திடீரென செந்தில்குமரன் மீது வெடிகுண்டுகளை வீசியது. இதில், நிலைகுலைந்த செந்தில்குமாரை கத்தியால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு அக்கும்பல் தப்பி ஓடிவிட்டது.
தகவலறிந்த அமைச்சர் நமச்சிவாயம், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். செந்தில்குமரன் உடலை பார்த்து கதறி அழுதார். இதனிடையே, போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸார், செந்தில்குமரன் மீது வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தி, கத்தியால் வெட்டிவிட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தினர். இதில், குறிப்பிட்ட கும்பல்தான் கொலை செய்தது என்பது போலீஸாருக்குத் தெரியவந்தது. இதையடுத்து, கொலைக் கும்பலை பிடிக்க போலீஸார் தனிப்படை அமைத்தனர். இந்த சூழலில், கொலைக் கும்பல் திருச்சி ஜே.எம். எண் 3 நீதிமன்றத்தில் நீதிபதி பாலாஜி முன்பு இன்று சரணடைந்திருக்கிறது.
சரணடைந்தவர்கள், புதுச்சேரி திருக்காஞ்சி பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி நித்தியானந்தம், கொம்பாக்கத்தைச் சேர்ந்த சிவசங்கர், கோர்கார்ட் பகுதியைச் சேர்ந்த ராஜா, கடலூர் கிளிஞ்சிகுப்பத்தைச் சேர்ந்த பிரதாப், கோர்கார்டு பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன், அரியாங்குப்பதைச் சேர்ந்த விக்னேஷ், புதுச்சேரி தனத்துமேடு பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பது தெரியவந்திருக்கிறது. புதுச்சேரியில் பா.ஜ.க. நிர்வாகி ஒருவர், வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.