தரமற்ற பொங்கல் பரிசு: அமைச்சர்களுக்கு நோட்டீஸ்!

தரமற்ற பொங்கல் பரிசு: அமைச்சர்களுக்கு நோட்டீஸ்!

Share it if you like it

தரமற்ற பொங்கல் பரிசு வழங்கிய விவகாரத்தில், தமிழக அமைச்சர்கள் இருவருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் வழங்கி உத்தரவிட்டிருக்கிறது.

பொங்கல் பண்டிகையை ஒட்டி, தமிழகத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பும், பரிசுப் பணமும் வழங்குவது வழக்கமாக இருந்து வருகிறது. முதலில் 1,000 ரூபாயாக இருந்த பரிசுப் பணம், பின்னர் 2,000 ரூபாயாக உயர்த்தப்பட்டது. இதனால், மக்கள் மகிழ்ச்சியுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடி வந்தனர். ஆனால், தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் பொங்கல் பரிசுத்தொகையை நிறுத்தி விட்டது. மேலும், கடந்த பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்பட்ட பரிசுத் தொகுப்பில் இருந்த பொருட்கள் அனைத்துமே தரமற்றதாக இருந்தன. உதாரணமாக, பொங்கல் வைக்க வழங்கப்பட்ட வெல்லம், கிரீஸைப் போல உருகி வழிந்தது. புளியில் பல்லி இறந்து கிடந்தது. மிளகுக்கு பதில் பப்பாளி விதை, பருத்திக் கொட்டை ஆகியவையே இருந்தன. மிளகாய் தூளில் கேசரி பவுடரும், மல்லித் தூளில் ரம்பத்தூளும் கலப்படம் செய்யப்பட்டிருந்தன. இது மட்டுமா, சீரகம், சோம்பில் மணல் கலப்படம் செய்யப்பட்டிருந்தது. இப்படி அனைத்துப் பொருட்களுமே தரமற்றதாக இருந்தன.

இதனால் ஆத்திரமடைந்த மக்கள் கொதித்தெழுந்தனர். பல இடங்களில் பொங்கல் பரிசுத் தொகுப்பை வீதியில் வீசிவிட்டுச் சென்றனர். திருத்தணியில் புளியில் பல்லி இருந்ததாகக் கூறிய பயனாளி மீது போலீஸில் புகார் கொடுக்கப்பட்ட வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இதனால், மனமுடைந்த அவரது தற்கொலை செய்து கொண்டார். இதை கண்டித்தும், தரமற்ற பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கியதை கண்டித்தும் பல இடங்களில் மக்கள் போராட்டத்திலும், ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இப்படி மாநிலம் முழுவதும் பிரச்னை வெடித்ததால், பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கிய ஒப்பந்த நிறுவனத்தை கருப்புப் பட்டியலில் வைக்க உத்தரவிட்ட முதல்வர் ஸ்டாலின், மேற்கண்ட நிறுவனம் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.

இந்த நிலையில், தரமற்ற பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கியது தொடர்பாக திருவள்ளூரைச் சேர்ந்த ஜெயகோபி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமிக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. மேலும், வழக்கு விசாரணையை ஜூன் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. இந்த விவகாரம்தான் தி.மு.க.வினரை கலக்கத்தில் ஆழ்த்தி இருக்கிறது. அதேசமயம், தி.மு.க. ஆட்சியின் ஆரம்பமே சரியில்லையே என்று மக்களும் அங்கலாய்த்து வருகின்றனர்.


Share it if you like it