பொங்கல் பரிசுத் தொகுப்பு ; ஸ்டாலின் அரசுக்கு குவியும் கண்டனங்கள் !

பொங்கல் பரிசுத் தொகுப்பு ; ஸ்டாலின் அரசுக்கு குவியும் கண்டனங்கள் !

Share it if you like it

பொங்கல் பரிசுத் தொகை குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் ரொக்கப்பணம் குறித்து எந்த அறிவிப்பு இடம்பெறாதது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பை அறிவித்துள்ளது தமிழக அரசு. அதன்படி பச்சரிசி, சர்க்கரை மற்றும் முழுகரும்பும் பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ரொக்க பணம் குறித்து எந்தவிதமான அறிவிப்பும் இல்லாததற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பாமக நிறுவனர் ராமதாஸ் தனது எக்ஸ் தளத்தில், ‘’தமிழர் திருநாளை ஏழைகள் கொண்டாட வேண்டாமா? பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1000 வழங்க வேண்டும்; கரும்புக்கான கொள்முதல் விலையை ரூ.50 உயர்த்துங்கள்! தமிழ்நாட்டில் நடப்பாண்டு பொங்கல் திருநாளுக்கான பரிசுத் தொகுப்பை தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

மொத்தம் 2.19 கோடி அரிசி குடும்ப அட்டைகளுக்கு ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு வழங்கப்படும் என்று தமிழக அரசின் ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், ரூ.1000 ரொக்கத் தொகை குறித்து எந்த அறிவிப்பும் இல்லாதது ஏழை மக்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

குடும்பத்தலைவிகளுக்கான ரூ.1000 மாத உரிமைத் தொகையும் தகுதியான பலருக்கு வழங்கப்படவில்லை. அதனால், பொதுமக்கள் மத்தியில் கடுமையாக மனக்குறை நிலவி வரும் சூழலில், பொங்கல் ரொக்கப்பரிசு வழங்கப்படாதது மக்களின் மனக்குறையை கோபமாக மாற்றிவிடும் என்பதை அரசு உணர வேண்டும்.

எனவே, பொங்கல் திருநாளையொட்டி அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசுத் தொகுப்புடன் குறைந்தபட்சமாக ரூ.1000 ரொக்கப்பரிசு வழங்க வேண்டும். அத்துடன், முழுக் கரும்புக்கு தமிழக அரசு அறிவித்துள்ள கொள்முதல் விலை ரூ.33 போதுமானதல்ல. அது அவர்களின் உற்பத்திச் செலவைக் கூட ஈடு செய்யாது. எனவே, செங்கரும்புக்கான கொள்முதல் விலையை ரூ.50 ஆக உயர்த்தி வழங்கவும் தமிழக அரசு ஆணையிட வேண்டும்’’ என வலியுறுத்தியுள்ளார்.

இதேபோல அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தனது எக்ஸ் தளத்தில், ‘’மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாட ஏதுவாக பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கப் பணமும் வழங்குமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

தமிழக அரசு சார்பாக அறிவிக்கப்பட்டுள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரொக்கப் பணம் வழங்குவது குறித்து எவ்வித அறிவிப்பும் இடம்பெறாதது எதிர்பார்த்து காத்திருந்த மக்கள் அனைவருக்கும் மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, அரசு சார்பாக வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கப் பணம் வழங்குவதோடு, மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு விநியோகம் செய்ய ஒதுக்கப்பட்ட நிவாரணத் தொகை முழுவதும் பொங்கல் பண்டிகைக்கு முன்பாகவே முறையாக சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்’’ என குறிப்பிட்டுள்ளார்.


Share it if you like it