ஹிந்தி படித்தால் பானிபூரி தான் விற்க வேண்டும் என அமைச்சர் பொன்முடி கூறியதற்கு நாடு முழுவதிலுமிருந்து வலுக்கும் எதிர்ப்பு.
தி.மு.க அமைச்சர்களின் பொறுப்பற்ற பேச்சு தமிழகத்திற்கு தொடர்ந்து அவபெயரை ஏற்படுத்தி வருகிறது. அந்தவகையில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சமீபத்தில் ஹிந்தி மொழி குறித்து தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.
கோவை பாரதியார் பல்கலை பட்டமளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், அமைச்சர் பொன்முடி, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மற்றும் இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து, பேசிய அமைச்சர் பொன்முடி வழக்கம் போல ஹிந்தி மொழிக்கு எதிராக பேசியிருந்தார். அவர் தனது பேச்சில் கூறியதாவது; நாங்கள் எந்த மொழியையும் எதிர்க்கவில்லை. எந்த ஒரு மொழிக்கும் எதிராக நாங்கள் இல்லை. இந்தி படிக்க விரும்பினால் அதை வெளியே சென்று படிக்கலாம். இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்று பிரச்சாரம் செய்கிறார்கள். இந்தி படித்தவர்கள்தான் தமிழ்நாட்டில் பானி பூரி விற்கிறார்கள் என்று சர்ச்சைக்குறிய வகையில் பேசி இருந்தார்.
தி.மு.க அமைச்சர் பொன்முடியின் கருத்திற்கு ஹிந்தியை தாய் மொழியாக கொண்டவர்கள் தற்பொழுது பதிலடி கொடுக்க துவங்கியுள்ளனர். அந்தவகையில், ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் உறுப்பினரும், பிரபல ஹிந்தி பாடகருமான குமார் விஷ்வாஸ் கூறியதாவது;
தமிழ் மிகவும் வளமான மற்றும் வளர்ந்த மொழி. அத்தகைய மொழிக்குடும்பத்தில் நாங்களும் நீங்களும் அங்கம் வகிப்பதில் நீங்கள் பெருமை கொள்ள வேண்டும். எங்கள் பகுதிகளில் இட்லி தோசை செய்யும் தென்னக சகோதரர்களை அன்போடும், மரியாதையோடும் “அண்ணா” என்று அழைக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் தமிழர்கள் அமைதியுடனும், சகோதரத்துடனும் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள், மத்தியில் பிரிவினையை ஏற்படுத்தி, நிம்மதியை கெடுத்து விடாதீர்கள் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதேநிலை, தொடர்ந்தால் ‘ஏ இட்லி பையா, ‘ஏ தோசை பையா என்று அம்மாநிலத்தில் வாழும் தமிழர்களை கேலி செய்யும் நிலை ஏற்பட்டால் அதற்கு முழு பொறுப்பு தி.மு.க என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.