பொன்னியின் செல்வன் திரைப்படத்தை PS-1 என்று போடக் கூடாது. பொன்னியின் செல்வன் என்று முழுவதுமாகத்தான் போட வேண்டும் என்று கோவையைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர்கள் வலியுறுத்தி இருக்கின்றனர்.
தமிழகத்தைப் பொறுத்தவரை, தமிழ் படங்களின் பெயர்களை சுருக்கி ஆங்கிலத்தில் வைப்பது தற்போது பேஷனாகி இருக்கிறது. தமிழில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘வேலை இல்லா பட்டதாரி’ படத்தை VIP என்று வைத்ததில் தொடங்கி தற்போது நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான ‘வெந்து தணிந்தது காடு’ படத்தை VTK என்று வைத்தது வரை இந்த ஆங்கில பெயர் சுருக்கும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று வெளியாகி இருக்கும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் பெயரை சுருக்கி ஆங்கிலத்தில் PS1 என்று வைத்திருக்கிறார்கள். இதற்குத்தான் எதிர்ப்புக் கிளம்பி இருக்கிறது. இத்தலைப்புக்கு எதிராக கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் போர்க்கொடி தூக்கி இருக்கிறார்கள். படத்தின் பெயரை முழுமையாக வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருப்பதோடு, இது தொடர்பாக படத்தை தயாரித்திருக்கும் லைகா நிறுவன உரிமையாளர் சுபாஷ்கரன், இயக்குனர் மணிரத்தினம், கதாநாயகன் விக்ரம், வெளியீட்டு நிறுவனம் ரெட் ஜெயன்ட் மூவிஸ் ஆகியோருக்கும் டிமாண்ட் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்கள்.
கோவை மாவட்டத்தில் சுமார் 30 வருடங்களுக்கும் மேலாக வழக்கறிஞராக பணிபுரிந்து வரும் சுந்தரவடிவேலு மற்றும் லோகநாதன் ஆகியோர்தான் இந்த டிமாண்ட் நோட்டீஸை அனுப்பி இருக்கிறார்கள். இது தொடர்பாக நேற்று கோவை பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களை சந்தித்தவர்கள், “லைகா நிறுவனம் தயாரிப்பில் மணிரத்தினம் இயக்கத்தில் கல்கியின் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகவிருக்கிறது. உண்மை சரித்திரத்தை கற்பனை கலந்த நாவலாக கல்கி எழுதியிருந்தார். இது தமிழர்களான சோழர்களின் வரலாற்றையும், அவர்கள் வாழ்வியலையும், வீரம், வணிகம், பொருளாதாரம் மற்றும் போர்கள் குறித்தும் விரிவாக பேசுகிறது. 1950-ம் ஆண்டே பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக எடுக்க எம்.ஜி.ஆர். முயற்சி எடுத்தார். ஆனால், பலனளிக்கவில்லை. பின்னர், 1990-ல் மணிரத்தினம் முயற்சி எடுத்து, தற்போது எடுக்கப்பட்டு திரைக்கு வருகிறது. இதை தாங்கள் வரவேற்கிறோம்.
அதேசமயம், இப்படத்தை தயாரித்த லைகா நிறுவனத்தின் விளம்பரங்களில் பொன்னியின் செல்வன் என்ற பெயரை PS-1 என்று பெரிதாக போட்டுவிட்டு, கீழே சிறியளவில் பொன்னியின் செல்வன் என்று குறிப்பிட்டிருக்கின்றனர். இப்படம், உலக மொழிகளில் மொழி பெயர்க்கப்படும்போது PS-1 என்று ஆங்கிலத்தில் வருமே தவிர, தமிழில் வராது. PS என்பது பாதிரியாரை குறிக்கக்கூடிய சொல். அதாவது, 1095 – 1291 காலகட்டத்தில் இஸ்லாமியர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் நடந்த சிலுவைப்போரின்போது பாதிரியார்களை சுருக்கமாக PS என்றுதான் அழைத்தார்கள். ஆகவே, PS என்கிற சொல் வேறு மதத்தை குறிக்கக்கூடியதாக இருக்கிறது. இது ஒருபுறம் இருக்க, ராஜ ராஜ சோழன் சைவ மதத்தை சேர்ந்தவர். எனினும், வணிக பொருளாதார நோக்கத்திற்காக கடல் வழியாக பயணம் செய்தபோது, புத்த மதத்தைத் தெரிந்துகொண்டு, அம்மதத்திற்கு நிறைய செய்திருக்கிறார். அவர் மதத்திற்கு எதிரானவர் அல்ல. அதேபோல, அவரது படையும் மிகவும் பலம் வாய்ந்தது. 1,000 கப்பல்களை வைத்து போர் புரிந்து பல்வேறு வெற்றிகளைக் கண்டவர். அப்படி இருக்க, பொன்னியின் செல்வன் என்பதை PS என்று போட்டால், இது ஏதோ மதப்போர் என்று மக்கள் தவறாக புரிந்துகொள்ளக்கூடும். ஆகவேதான் PS என்று போடுவதை தவிர்க்க வேண்டுகிறோம். தவிர, லைகா நிறுவனத்தின் உரிமையாளர் சுபாஷ்கரன் ஒரு பிரிட்டிஷ் ஸ்ரீலங்கன் தொழிலதிபர் என்பதும் கவனிக்கத்தக்கது.
ஆகவே, எந்த மொழியாக இருந்தாலும், பொன்னியின் செல்வன் என்றுதான் குறிப்பிட வேண்டும். ஹாலிவுட்டில் ஆங்கில படத்தின் பெயரை மாற்றுவதில்லை. அப்படியேதானே போடுகிறார்கள். அதேபோல, தமிழ் படத்தின் பெயரை ஆங்கிலத்திலும் PONNIYIN SELVAN என்று தமிழிலேயே போட வேண்டும். விளம்பரங்களிலும் PS-1 என்பதை மாற்ற வேண்டும். வீரத்தமிழர்களின் வரலாறை திரைப்படங்களில் தமிழ் பெயர்களில் பயன்படுத்தினால்தான், தமிழர்களின் வரலாறு மறைக்கப்படாமல் இருக்கும். ஆகவே, பொன்னியின் செல்வன் என்ற பெயரையே உலகின் எந்த மொழியில் எடுத்தாலும் போட வேண்டும். பெயரை மாற்றக்கூடாது. தமிழன் என்கிற முறையில் கோரிக்கை விடுக்கிறோம். ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளாததும் தயாரிப்பாளர் மற்றும் இயகுநரின் விருப்பம். கமர்ஷியல் படத்திற்கும், வரலாற்று படத்திற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. உதாரணமாக, வேலையில்லா பட்டதாரி படத்தை VIP என்று சொன்னார்கள். அதை நாங்கள் கேட்கவில்லையே. இது வரலாற்று படம். அதோடு, தமிழர்களான சோழர்களின் வீரத்தை போற்றும் படம் என்பதால்தான் அவர்களது பெயர்கள் வரலாற்றில் திருத்தப்படக்கூடாது என்று கோரிக்கை விடுக்கிறோம்” என்று மூத்த வழக்கறிஞர் சுந்தரவடிவேலு தெரிவித்தார்.