தேசிய ஜனநாயக கூட்டணியின் 3-வது ஆட்சியில் மிகப்பெரிய முடிவுகள் எடுக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற வெற்றி கொண்டாட்டத்தில் அவர் பேசியதாவது:
மக்களவைத் தேர்தலில் 64 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வாக்களித்து புதிய சாதனை படைத்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் மக்கள் பெருந்திரளாக வாக்களித்து உலகத்துக்கு உண்மை நிலவரத்தை உணர்த்தி உள்ளனர். இந்த நேரத்தில் மக்களவைத் தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடித்த தேர்தல் ஆணையத்துக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 3-வது முறை ஆட்சி அமைப்பதற்காக மக்கள் தீர்ப்பளித்து உள்ளனர். இது, அரசமைப்பு சாசனத்தின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை உணர்த்துகிறது. பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி மீது மக்கள் அபார நம்பிக்கை வைத்திருப்பது மீண்டும் உறுதியாகி உள்ளது. பாஜக கூட்டணிக்கு வாக்களித்த மக்களுக்கு மனதார நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த 1962-ம் ஆண்டுக்குப் பிறகு மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்ச்சியாக 3-வது முறையாக பதவியேற்க உள்ளது. இது வரலாற்று சாதனை ஆகும். ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், ஒடிசா, சிக்கிமில் காங்கிரஸ் கட்சி முழுமையாக தோற்கடிக்கப்பட்டு உள்ளது. ஒடிசாவில் முதல்முறையாக பாஜக ஆட்சி அமைக்க உள்ளது. இது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்.
கேரளாவில் கால் ஊன்ற பாஜக மிகநீண்ட காலமாக முயற்சி செய்து வருகிறது. இதற்காக பாஜக தொண்டர்கள் பல்வேறு தியாகங்களை செய்துள்ளனர். இதன் பலனாக கேரளாவின் திருச்சூர் மக்களவைத் தொகுதியில் பாஜக அபார வெற்றி பெற்றிருக்கிறது.
தெலங்கானாவில் பாஜக எம்பிக்களின் எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்துள்ளது. ஆந்திராவில் எங்களது கூட்டணியின் மூத்த தலைவர் சந்திரபாபு நாயுடுவும், பிஹாரில் எங்களது கூட்டணியின் மூத்த தலைவர் நிதிஷ் குமாரும் அதிக இடங்களைக் கைப்பற்றி சாதனை படைத்து உள்ளனர்.
தேசிய ஜனநாயக கூட்டணியின் 3-வது ஆட்சியில் மிகப்பெரிய முடிவுகள் எடுக்கப்படும். இது மோடியின் உத்தரவாதம். உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியாவை மாற்ற அதிதீவிர நடவடிக்கை எடுக்கப்படும். பாதுகாப்பு துறை உற்பத்தியில் தன்னிறைவை எட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.