சற்று கடினமான தேர்வு என்று சொல்லக்கூடிய ஜேஇஇ தேர்வில் பழங்குடியின மாணவிகள் இருவர் தேர்ச்சி அடைந்தது தமிழகத்தில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாடு முழுவதும் உள்ள முதன்மை பொறியியல் கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி, என்.ஐ.டி, ஐ.ஐ.ஐ.டி போன்ற நிறுவனங்களின் மாணவர் சேர்க்கைக்கு கூட்டு நுழைவுத் தேர்வு எனப்படும் ஜே.இ.இ தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். கடும் போட்டி நிறைந்த இந்தத் தேர்வு பல்வேறு அமர்வுகளாக ஆன்லைன் முறையில் நடைபெறும்.
இந்தநிலையில், இந்த ஆண்டு நடைபெற்ற ஜே.இ.இ தேர்வில் தேர்ச்சி பெற்று தமிழகத்தைச் சேர்ந்த 2 பழங்குடியின மாணவிகள் அசத்தியுள்ளனர். ஜே.இ.இ தேர்வில் தேர்ச்சி பெற்ற இந்த மாணவிகளுக்கு திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகம் எனப்படும் என்.ஐ.டி.,யில் பொறியியல் படிக்க இடம் கிடைத்துள்ளது. இதன்மூலம் கடந்த 60 ஆண்டுகளில் திருச்சி என்.ஐ.டி சீட் பெற்ற முதல் பழங்குடியின மாணவிகள் என்ற பெருமையை இவர்கள் பெற்றனர்.
ஜே.இ.இ தேர்வில் மாணவி ரோகிணி 73.8 சதவீத மதிப்பெண்கள் பெற்று, தமிழ்நாட்டில் தேர்வெழுதிய பழங்குடியின மாணவிகளில் முதலிடம் பிடித்துள்ளார். இந்தநிலையில் திருச்சி என்.ஐ.டி.,யில் மாணவி ரோகிணிக்கு வேதிப் பொறியியலும் (Chemical Engineering), மாணவி சுகன்யாவுக்கு உற்பத்தி பொறியியலும் (Production Engineering) படிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
அதேபோல் அந்த கல்லூரியில் கரிய கோவிலை சேர்ந்த சுகன்யா என்ற மாணவி உற்பத்தி பொறியியிலும் படிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார் . இதன் மூலம் கடந்த 60 ஆண்டுகளில் திருச்சி NIT-ல் சீட் பெற்ற முதல் பழங்குடியின மாணவிகள் என்ற பெருமையை இவர்கள் இருவரும் பெற்றனர்
இதுகுறித்து மாணவி ரோகிணி கூறுகையில், ”பழங்குடியின சமூகத்தை சேர்ந்த நான் பழங்குடியினர் அரசு பள்ளியில் படித்தேன். ஜே.இ.இ தேர்வெழுதி 73.8 சதவீத மதிப்பெண்கள் பெற்றேன். திருச்சி என்.ஐ.டி.,யில் சீட் பெற்று, கெமிக்கல் பாடத்தை தேர்வு செய்துள்ளேன். தமிழக அரசு எனது அனைத்து கட்டணங்களையும் செலுத்த முன்வந்துள்ளது. எனக்கு உதவிய முதலமைச்சருக்கு நன்றி. எனது பள்ளி தலைமையாசிரியர் மற்றும் பிற ஆசிரியர்களால் நான் சிறப்பாக செயல்பட்டேன்,” என்று தெரிவித்துள்ளார்.