உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் வரும் 22-ம் தேதி திறக்கப்பட இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி கோயில் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொள்கிறார். கர்நாடகாவில் தயாரிக்கப்பட்ட ராமர் சிலை அயோத்தி ராமர் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட இருக்கிறது. கோயில் திறப்பு விழாவுக்கு நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கானோர் அயோத்திக்கு வருகின்றனர்.
இந்நிலையில், ராமர் கோயில் திறக்கப்படும் நாளில் குழந்தை பெற்றுக்கொள்ள, பல கர்ப்பிணிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர். கான்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் தினமும் 15 பிரசவம் நடப்பது வழக்கம். ஆனால், வரும் 22-ம் தேதி கான்பூர் மருத்துவமனையில் குழந்தை பெற்றுக்கொள்ள ஏராளமான பெண்கள் முன்பதிவு செய்து இருக்கின்றனர்.
சில பெண்கள் தங்களது பிரசவ தேதி முன்கூட்டியே இருந்தால் அதை 22-ம் தேதிக்குத் தள்ளிப்போடும்படி டாக்டர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர். இது குறித்து கான்பூர் அரசு மருத்துவனை டாக்டர் சீமா திவேதி கூறுகையில், “தற்போது எங்களுக்கு, 22-ம் தேதி பிரசவம் வைத்துக்கொள்ள அனுமதி கேட்டு தினமும் 14-க்கும் மேற்பட்ட கோரிக்கைகள் வந்து கொண்டிருக்கின்றன. குறிப்பிட்ட தேதியில் குழந்தை பெற்றுக் கொள்வதாக இருந்தால் அது சுகப்பிரசவமாக இருக்காது என்றும், சிசேரியன் மூலம்தான் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் சொல்லி இருக்கிறோம். 22-ம் தேதி 30 பெண்களுக்கு பிரசவம் நடைபெறவிருக்கிறது” என்று கூறியுள்ளார்.
22-ம் தேதி குழந்தை பெற்றுக்கொள்ள இருக்கும் பெண் ஒருவரின் உறவினர் இது குறித்து கூறுகையில், `ராமர் கோயில் திறப்பு விழாவன்று எங்கள் குழந்தை பிறக்க வேண்டும் என்று விரும்புகிறோம். ராமர் கோயிலுக்காக 100 ஆண்டுகளுக்கும் மேல் காத்திருந்தோம். எனவே, ராமர் கோயில் திறப்பு விழா நன்னாளில் குழந்தை பெற்றுக்கொள்வது சிறந்த தருணம்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த சுப நாளில் குழந்தை பிறந்தால், அது குழந்தையின் வாழ்வில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என மக்கள் நம்புகின்றனர்’ என உளவியலாளர் திவ்யா குப்தா கூறியிருக்கிறார். இந்தச் சம்பவம் மக்களின் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.
சில பெண்கள், தங்களின் பிரசவ தேதி 22-ம் தேதிக்குப் பிறகு இருந்தாலும் 22-ம் தேதியில் குழந்தை பெற்றுக்கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர். அரசு மருத்துவமனை மட்டுமல்லாது தனியார் மருத்துவமனைகளிலும் ஏராளமான பெண்கள் 22-ம் தேதி குழந்தை பெற்றுக்கொள்ள முன்பதிவு செய்து வைத்திருக் கின்றனர்.
அயோத்தி ராமர் கோயிலில் ராமர் சிலை 22-ம் தேதி பிற்பகல் 12.29 மணிக்கு பிரதிஷ்டை செய்யப்பட இருக்கிறது. அந்த நேரத்தில் குழந்தை பெற்றுக்கொள்ளவும் சில பெண்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
பிரசவத்தில் மிக முக்கியமானது, தாய், சேய் நலம். அதை முன்னிறுத்தி முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்துவது குறிப்பிடத்தக்கது.