பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார் திரெளபதி முர்மு. இவர் யார்? இவரது பின்னணி என்ன? என்பது பற்றி பார்ப்போம்.
ஜனாதிபதியாக இருக்கும் ராம்நாத் கோவிந்தின் பதவிகாலம் ஜூலை மாதத்துடன் முடிவடைகிறது. ஆகவே, புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க ஜூலை 18-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதையடுத்து, எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் 17 எதிர்க்கட்சிகள் ஒன்றுகூடி வேட்பாளரை தேர்வு செய்யும் முயற்சியில் ஈடுபட்டன. தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தி என பலரது பெயரை பரிந்துரை செய்த நிலையில், மூவருமே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மறுத்து விட்டனர். இதைத் தொடர்ந்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய யஷ்வந்த் சின்ஹா எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நேற்று பிற்பகல் அறிவிக்கப்பட்டார்.
இந்த நிலையில், பா.ஜ.க. கூட்டணி வேட்பாளராக திரௌபதி முர்மு நேற்று இரவு அறிவிக்கப்பட்டிருக்கிறார். யார் இந்த திரௌபதி முர்மு? 1958-ம் ஆண்டு ஜூன் 20-ம் தேதி ஒடிஸா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டத்திலுள்ள பைடாபோசி என்ற கிராமத்தில் பிறந்தவர் திரெளபதி முர்மு. இவர் ‘சந்தல்’ என்ற பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். புவனேஸ்வரில் உள்ள ரமாதேவி கல்லூரியில் பட்டப்படிப்புகளை முடித்தவர், ஸ்ரீஅரவிந்தர் கல்வி மையத்தில் உதவிப் பேராசிரியராக பணியாற்றினார். பிறகு ஒடிஸா நீர்ப்பாசனத் துறையில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்தார். இவரது கணவர் சியாம் சரன் முர்மு. இத்தம்பதிக்கு 2 மகன்கள். எனினும், குறுகிய காலத்திலேயே இவரது கணவர் சியாம் விபத்தில் உயிரிழந்து விட்டார். தொடர்ந்து, 2 மகன்களும் உடல்நலக்குறைவால் உயிரிழந்து விட்டனர்.
இப்படி சொந்த வாழ்க்கையில் பெரும் துயரை சந்தித்தவர், தனது வாழ்க்கை தான் சார்ந்த பழங்குடியின மக்களுக்கு அர்ப்பணிக்க முடிவு செய்தார். ஆகவே, 1997-ம் ஆண்டு பா.ஜ.க.வில் இணைந்து, ராய்ரங்பூரில் கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதன் மூலம் தனது அரசியல் பயணத்தை தொடங்கியவர், பிஜு ஜனதா தளம் – பா.ஜ.க. கூட்டணியில் 2002-ம் ஆண்டு போட்டியிட்டு ராய்ரங்க்பூர் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், ஒடிஸா அமைச்சரவையில் 2 ஆண்டுகள் போக்குவரத்துத் துறை அமைச்சராகவும், 2 ஆண்டுகள் மீன்வளத் துறை அமைச்சராகவும் பணியாற்றினார். 2007-ம் ஆண்டு ஒடிஸா மாநிலத்தின் சிறந்த சட்டமன்ற உறுப்பினருக்கான விருதை பெற்றார். மேலும், பா.ஜ.க.வின் பழங்குடியின அமைப்பின் துணைத் தலைவராகவும் பொறுப்பு வகித்தார்.
கடந்த 2015-ம் ஆண்டு ஜார்கண்ட் மாநிலத்தின் முதல் பெண் கவர்னராக திரெளபதி நியமிக்கப்பட்டார். இதன் மூலம் இந்தியாவிலேயே பழங்குடியினத்தைச் சேர்ந்த முதல் கவர்னர் என்கிற பெருமையை பெற்றார். இந்த சூழலில், கடந்த குடியரசுத் தலைவர் தேர்தலின்போதே, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் பெயர் பட்டியலில் இவரது பெயரும் இடம்பெற்றிருந்தது. ஆனாலும், ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டார். எனவே, இந்த முறை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். திரெளபதி முர்மு ஜனாதிபதியாக வெற்றி பெறும் பட்சத்தில், இந்தியாவின் முதல் பழங்குடியின ஜனாதிபதி என்கிற பெருமையைப் பெறுவார். அதோடு, சுதந்திரத்துக்கு பிறகு பிறந்த ஒருவர் குடியரசுத் தலைவராவது இதுவே முதன்முறையாக இருக்கும்.