ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி மற்றும் பிற அதிகாரிகளை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் மோசமான வானிலையால் நாட்டின் மலை மற்றும் வனப் பகுதியில் விபத்துக்குள்ளானதில் இறந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிகழ்விற்கு முன்னாள் ஈரானிய வெளியுறவு அமைச்சர் ஜாவத் ஜரீப், அதிபர் ரைசிக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்ட செய்தியில், விபத்து பற்றிய செய்தி “வேதனையானது” என்று ஜரீஃப் குறிப்பிட்டுள்ளார்.
“தியாகிகளுக்கு கடவுளின் மகிழ்ச்சி, உயிர் பிழைத்தவர்களுக்கு அமைதி மற்றும் பொறுமை, ஈரானிய மக்களுக்கு ஒற்றுமை மற்றும் முன்னேற்றம் ஆகியவை கிடைக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, நேற்று ஞாயிற்றுக்கிழமை அன்று அவர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய நிலையில் அதன் பாகங்கள் இன்று (திங்கள்கிழமை) அடையாளம் காணப்பட்டன. இந்தச் சூழலில் விபத்தில் அவர் உயிரிழந்து விட்டதாக அந்த நாட்டு ஊடக நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அஜர்பைஜான் நாட்டுக்குச் சென்ற அதிபர் ரெய்சி, அங்கிருந்து ஹெலிகாப்டரில் நாடு திரும்பி கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டது. சுமார் 17 மணி நேர தேடுதலுக்குப் பிறகு ஹெலிகாப்டரின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர் முழுவதும் தீயில் கருகி உருக்குலைந்து காட்சி அளிக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் பதிவில் தனது தனது இரங்கலை தெரிவித்துள்ளார். அதில், ஈரான் இஸ்லாமியக் குடியரசின் தலைவர் டாக்டர். சையத் இப்ராஹிம் ரெய்சியின் சோகமான மறைவால் ஆழ்ந்த வருத்தமும் அதிர்ச்சியும் அளிக்கிறது. இந்தியா-ஈரான் இருதரப்பு உறவை வலுப்படுத்த அவரது பங்களிப்பு எப்போதும் நினைவுகூரப்படும். அவரது குடும்பத்தினருக்கும் ஈரான் மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரமான நேரத்தில் இந்தியா ஈரானுடன் நிற்கிறது. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.