கேரளாவில் ஏற்பட்ட கேரளாவில் உள்ள வயநாடு பகுதியில் கடந்த 30 ஆம் தேதி காலை நிலச்சரிவு ஏற்பட்டதில் சூரல்மலை, முண்டக்கை, பூஞ்சிரித்தோடு,அட்டமலை ஆகிய கிராமங்கள் நிலச்சரிவில் அடித்து செல்லப்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளையும், உடைமைகளையும் இழந்தனர்.
நிலச்சரிவில் சிக்கி 413 பேர் இதுவரை பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சுமார் 130 பேர் இன்னும் காணாமல் போயுள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது. நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒரு வாரத்துக்கு மேலாக மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. ஒட்டு மொத்த தேசத்தையும் கேரள நிலச்சரிவு சம்பவம் அதிரவைத்தது.
இந்தநிலையில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட பிரதமர் மோடி இன்று கேரளா சென்றுள்ளார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்ட பிரதமர் மோடி காலை 11.30 மணியளவில் கேரளாவின் கண்ணூர் விமான நிலையம் வந்தடைந்தார். அங்கு பிரதமர் மோடியை கேரள முதல்வர் பினராயி விஜயன் விமான நிலையம் சென்று வரவேற்றார்
இதனை தொடர்ந்து ஹெலிகாப்டரில் சென்றபடி வான்வழியாக பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி ஆய்வு செய்தார். அப்போது கேரள முதல்வர் பினராயி விஜயனும் மோடி அருகில் அமர்ந்து இருந்தார்.
இதன் பின்னர் பிரதமர் மோடி, வயநாட்டில் மீட்புப் பணிகள் குறித்து மீட்புப் படையினரிடம் கேட்டு அறிந்து கொள்கிறார். அதனைத் தொடர்ந்து அங்கு மறுவாழ்வுப் பணிகள் எப்படி நடக்கின்றன? என்பதையும் மோடி பார்வையிடுகிறார். பின்னர், நிலச்சரிவில் சிக்கி மீட்கப்பட்டவர்கள் தங்கியிருக்கும் முகாமுக்கும், சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கும் பிரதமர் மோடி நேரில் சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
அண்டை மாநிலமான கேரளா இயற்கை சீற்றத்தால் தத்தளித்து கொண்டிருக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் 5 கோடி நிதி மட்டும் கேரளா முதல்வர் பினராயி விஜயனிடம் கொடுத்துவிட்டு, ஒருமுறை கூட நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்க்கவில்லை என்று முதல்வர் ஸ்டாலினை சமூக ஆர்வலர்கள் விமர்சித்து வருகின்றனர்.