கிறிஸ்துமஸ் பண்டிகை நாளில் டெல்லியில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தை பள்ளி குழந்தைகள் சுற்றிப் பார்த்துள்ளனர். இந்த வீடியோவை பிரதமர் வெளியிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, டெல்லியின் லோக் கல்யாண் மார்க் பகுதியில் உள்ள 7-ம் எண் கொண்ட இல்லத்தில் வசிக்கிறார். கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று தனது இல்லத்தில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக தனது இல்லத்துக்கு வந்திருந்த பள்ளி குழந்தைகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்து பாடல்களை குழந்தைகள் பாடினர்.
இதையடுத்து, இதற்கு முன்பு பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தை பார்வையிடுவதற்கான வாய்ப்பு உங்களுக்கு கிடைத்திருக்கிறதா என பிரதமர் அவர்களிடம் கேட்டுள்ளார். இல்லை என அவர்கள் பதில் அளித்துள்ளனர். இதையடுத்து, நீங்கள் இந்த இல்லத்தை சுற்றிப்பார்க்க ஏற்பாடு செய்கிறேன் என பிரதமர் கூறியுள்ளார். பின்னர் பிரதமர் அலுவலகம், அமைச்சரவை கூட்டம் நடைபெறும் இடம் உள்ளிட்ட பகுதிகளை குழந்தைகளுக்கு அதிகாரிகள் சுற்றிக் காட்டினர்.
இதுகுறித்து ஒரு மாணவர் கூறும்போது, “இது ஒரு பெரிய வாய்ப்பு. இதுபோன்ற பல வாய்ப்புகள் காத்திருப்பதாக நம்புகிறேன்” என்றார். இது தொடர்பான வீடியோவை பிரதமர் மோடி எக்ஸ் சமூக வலைதலத்தில் நேற்று பகிர்ந்தார். அந்த வீடியோவில் குழந்தைகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார். பின்னர் அந்தக் குழந்தைகள் மிகவும் மகிழ்ச்சியுடன் அந்த இல்லத்தைச் சுற்றிப் பார்க்கின்றனர்.
இந்த வீடியோவுடன் பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், “ஆர்வமுடைய இளம் மனங்கள் பிரதமர் இல்லம் முழுவதையும் உலா வந்தன. இது அவர்களுக்கு மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது. அவர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதன் மூலம், என் அலுவலகம் இறுதி தேர்வில் தேர்ச்சி பெற்றதாக கருதுகிறேன்” என கூறியுள்ளார்.