லோக்சபா தேர்தலில் பா.ஜ.க வென்ற நிலையில், பிரதமர் மோடிக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதன் விபரம் பின்வருமாறு:
மாலத்தீவு அதிபர் முகமது முய்சு
லோக்சபா தேர்தலில் தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்ற பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாழ்த்துக்கள். ஒன்றிணைந்து செயல்பட நான் எதிர்நோக்குகிறேன்.
இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி: சிறப்பாக செயல்பட பிரதமர் மோடிக்கு எனது அன்பான வாழ்த்துக்கள். இரு நாட்டு மக்களின் நலனுக்காக இணைந்து பணியாற்றுவோம்.
இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே: மோடி மீதான இந்திய மக்களின் நம்பிக்கையை இந்த வெற்றி காட்டுகிறது.
அமெரிக்கா பாராட்டு
அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர்: ஜனநாயக திருநாட்டில் பெரும் தேர்தல் பணிகளை சிறப்பாக நடத்தி முடித்துள்ள இந்தியாவிற்கு பாராட்டுக்கள் ! அமெரிக்காவிற்கும், இந்தியாவிற்கும் இடையே ஒரு நெருக்கமான கூட்டாண்மை தொடரும். பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்கள்.
உறவு வாழ்க
மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜக்நாத்: மூன்றாவது முறையாக வெற்றி பெற்றுள்ள பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்கள். உங்கள் தலைமையில் இந்தியா தொடர்ந்து முன்னேற்றத்தை அடையும். ‛மொரீஷியஸ் -இந்தியா உறவு வாழ்க’.
நேபாள பிரதமர் புஷ்பகமல் தஹால்
தொடர்ந்து மூன்றாவது முறையாக லோக்சபா தேர்தலில் பா.ஜ.க மற்றும் தே.ஜ. கூட்டணியின் தேர்தல் வெற்றிக்கு வித்திட்ட பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துக்கள்.
பூடான் பிரதமர் ஷெ ரிங் டோப்கே
உலகின் மிகப்பெரிய தேர்தலில் வரலாற்று சிறப்புமிக்க வகையில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்ற நண்பர் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துக்கள். இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்த, அவருடன் பயணியாற்ற ஆவலோடு உள்ளேன்.
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
3வது முறையாக பிரதமராக உள்ள மோடிக்கு வாழ்த்துகள். இரு தரப்பு உறவுகள் மேலும் வலுவடையும்.
உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி
தேர்தலில் பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி தொடர்ந்து மூன்றாவது முறை வெற்றி பெற்றுள்ளதற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துக்கள். அமைதி மற்றும் செழிப்பை விரும்புகிறேன். இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகள் மேலும் வலுவடையும் என நம்புகிறேன்.
நன்றி
வாழ்த்து தெரிவித்த, அனைத்து நாட்டு தலைவர்களுக்கும் பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.