கடந்த 10 ஆண்டுகாலத்தில் இந்தியா எட்டியுள்ள சாதனைகள் குறித்து நமோ செயலி மூலம் கருத்து தெரிவிக்க நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் மத்திய அரசின் செயல்பாடு, உள்ளூர் எம்.பி.யின் செயல்பாடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் மக்களின் மனநிலையை அறிய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியின் ‘நமோ’ செயலி மூலம் புதிய ஆய்வு கடந்த மாதம் தொடங்கப்பட்டது. ‘ஜன் மன் சர்வே’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஆய்வின் மூலம் மத்திய அரசு நிர்வாகம், தலைமை, மத்திய அரசு நிலையிலான வளர்ச்சி, நமோ செயலியைப் பயன்படுத்துவோரின் தொகுதி நிலவரம் உள்ளிட் டவை தொடர்பாக மக்களிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பப்படுகின்றன. அரசுத் திட்டங்களின் தாக்கம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக இந்த ஆய்வில் கேள்விகள் உள்ளதாகத் தெரிகிறது. இது தொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில், ‘கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் சாதனைகள் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உங்கள் கருத்துகளை நமோ செயலில் நடத்தப்படும் “ஜன் மன் சர்வே” மூலம் நேரடியாக என்னிடம் நீங்கள் தெரிவிக்கலாம்’ என்று கூறியுள்ளார்.