நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்கள் இடையே தற்போது 47 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. தெற்கு ரயில்வேயில், சென்னை சென்ட்ரலில் இருந்து கோவை, மைசூரு, விஜயவாடா ஆகிய நகரங்களுக்கும், சென்னை எழும்பூர் – நெல்லை, திருவனந்தபுரம் - காசர்கோடு உள்ளிட்ட வழித்தடங்களிலும் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்த ரயில்களுக்கு பயணிகளிடம் நல்ல வரவேற்பு உள்ளது. அதனால், எப்போதும் இருக்கைகள் முழுமையாக நிரம்பிய நிலையிலேயே இந்த ரயில்கள் செல்கின்றன. கூட்ட நெரிசல் அதிகமாக இருப்பதால், இவை சிறப்பு ரயில்களாகவும் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ஒரு நாள் பயணமாக குஜராத் சென்றுள்ளார். அகமதாபாத்தில் நடைபெற்ற விழாவில்,அகமதாபாத்-மும்பை சென்ட்ரல், செகந்திராபாத்-விசாகப்பட்டினம், மைசூரு- டாக்டர் எம்ஜிஆர் சென்ட்ரல் (சென்னை), பூரி-விசாகப்பட்டினம், லக்னோ – டேராடூன், உள்ளிட்ட பத்து புதிய வந்தே பாரத் ரயில்களை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மேலும், சர்.எம்.விஸ்வேஸ்வரய்யா டெர்மினல் பெங்களூரு, ராஞ்சி-வாரணாசி, கஜுராஹோ- டெல்லி (நிஜாமுதீன்). அகமதாபாத்-ஜாம்நகர் வந்தே பாரத் உட்பட நான்கு வந்தே பாரத் ரயில்களின் விரிவாக்கத்தையும் மோடி தொடங்கி வைத்தார். மேலும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரு.85,000 கோடி ரூபாய் மதிப்பிலான ரயில்வே திட்ட பணிகளையும் அவர் தொடங்கி வைத்தார்.