ஒடிசா சென்ற பிரதமர் நரேந்திர மோடி அங்கு பத்ம விருது பெற்றவர்களை சந்தித்துப் பேசினார்.
இதுதொடர்பாக பிரதமர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், ஒடிசா பயணத்தின் போது, அடிமட்ட அளவில் நமது தேசத்திற்கு சிறந்த பங்களிப்பைச் செய்த புகழ்பெற்ற பத்ம விருது பெற்ற சிலரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது என தெரிவித்துள்ளார்.
2016-ல் பத்மஸ்ரீ விருது பெற்ற ஸ்ரீ ஹலதர் நாக் ஜியை சந்தித்ததில் மகிழ்ச்சி. சம்பல்புரி மற்றும் ஒடியா இலக்கியங்களைப் பாதுகாப்பதிலும் ஊக்குவிப்பதிலும் அவரது விடாமுயற்சியும், ஆழ்ந்த அர்ப்பணிப்பும் ஊக்கமளிக்கிறது. இலக்கியத்தின் மீதான அவரது ஆர்வம் நமது மொழியியல் மரபுகளுக்கு பெருமை சேர்க்கிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
மேலும் 2017ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்ட ஜிதேந்திர ஹரிபாலையும் மோடி சந்தித்தார். அவரது ரங்கதி பாடலை மக்கள் போற்றுவதாகவும், அவரை சந்தித்ததில் மகிழ்ச்சி என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
பத்மஸ்ரீ விருது பெற்ற பினோத் குமார் பசாயத்தையும் சந்தித்தேன். சம்பல்பூரைச் சேர்ந்த அவர் ஒரு புகழ்பெற்ற பாடலாசிரியர், நாடக ஆசிரியர் மற்றும் கவிஞர். சம்பல்புரி மொழிக்கு அவர் செய்த பங்களிப்பு விலைமதிப்பற்றது என்றும் மோடி குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீ மித்ரபானு கவுண்டியா ஜியை சந்தித்தது ஒரு செழுமையான அனுபவமாக இருந்ததாக மோடி தெரிவித்துள்ளார். நாடக ஆசிரியர், கவிஞர், பாடலாசிரியர் மற்றும் நாவலாசிரியர் என அவரது பன்முகத் திறமை நமது கலாச்சாரத்தை மெருகேற்றியுள்ளது. 2020ஆம் ஆண்டு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.