குஜராத்தின் துவாரகா நகரில் துவாரகாதீசர் கோயில் அமைந்துள்ளது. இது திருமாலின் 108 திவ்யதேசங்களில் ஒன்றாகும். பிரதமர் மோடி நேற்று துவாரகாதீசர் கோயிலில் வழிபாடு நடத்தினார்.பின்னர் அவர் ஸ்குபா டைவிங் உபகரணங்களுடன் ஆழ்கடலில் மூழ்கி கிருஷ்ணர் கால துவாரகா நகரில் பிரார்த்தனை செய்தார்.
இதுகுறித்து சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், “ஆழ்கடலில் மூழ்கியுள்ள துவாரகா நகரத்தில் பிரார்த்தனை செய்தது மிகவும் தெய்வீக அனுபவம் ஆகும். ஆன்மிக மகத்துவம் மற்றும் காலத்தால் அழியாத பண்டைய சகாப்தத்துடன் நான் இணைந்திருப்பதை உணர்ந்தேன். பகவான் கிருஷ்ணர் அனைவரையும் ஆசீர்வதிக்கட்டும் என்று தெரிவித்துள்ளார்.
ஆழ்கடலில் மூழ்கிய துவாரகாவில் பிரதமர் மோடி பிரார்த்தனை செய்தபோது மயில் இறகுகளை காணிக்கையாக வழங்கினார். ஆழ்கடலில் மூழ்கிய துவாரகா நகரை பார்வையிட குஜராத் அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக மும்பையில் சிறப்பு நீர்மூழ்கி தயார் செய்யப்பட்டு வருகிறது.
நீண்ட காலமாக இருந்த அயோத்தி ராமர் கோவில் பிரச்சனையை தீர்த்து வைத்து அங்கே ராமருக்காக பிரமாண்டமான கோவிலையும் கட்டி விட்டார். தற்போது துவாரகாவில் ஆழ்கடலில் மூழ்கி ஸ்ரீ கிருஷ்ணரை நினைத்து மனம் உருகி பிரார்த்தனை செய்துள்ளார். அடுத்து ஸ்ரீ கிருஷ்ணருக்கு கோவில் கட்டப்போகிறார் என்று நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.