பிரதமர் மோடியை சமூக வலைத்தளமான எக்ஸ் தளத்தில் அதிகமானோர் பின்தொடர்கின்றனர். எக்ஸ் தளத்தில் அதிகமானோர் பின்தொடர்பவர்கள் பட்டியலில் தொடர்ந்து இரண்டாம் இடத்தில் உள்ளார் பிரதமர் மோடி. இந்நிலையில் பிரதமர் மோடியின் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையானது 100 மில்லியனை எட்டியுள்ளது. அதாவது 10 கோடி பேர் பிரதமர் மோடியை பின்பற்றுகின்றனர். அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா 131.7 மில்லியன் பின்தொடர்பவர்களை பெற்று முதலிடத்தில் உள்ளார்.
பிரதமர் மோடியுடன் ஒப்பிடுகையில், மற்ற இந்திய அரசியல் தலைவர்களுக்கு பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்திக்கு 26.4 மில்லியன், டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 27.5 மில்லியன், சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ் 19.9 மில்லியன் பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளனர்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு 7.4 மில்லியன் பின்தொடர்பவர்களும், ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கு 6.3 மில்லியன் பின்தொடர்பவர்களும் உள்ளனர். அவரது மகன் தேஜஸ்வி யாதவ் 5.2 மில்லியன் பின்தொடர்பவர்களையும், NCP (SP) தலைவர் சரத் பவாருக்கு 2.9 மில்லியன் பின்தொடர்பவர்களும் உள்ளனர்.
யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற பிற சமூக தளங்களிலும் பிரதமர் மோடிக்கு பெரும் வரவேற்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. அவர் யூடியூப்பில் கிட்டத்தட்ட 25 மில்லியன் சந்தாதாரர்களையும், இன்ஸ்டாகிராமில் முறையே 91 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களையும் கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் பதிவில், இந்த துடிப்பான ஊடகத்தில் இருப்பதில் மகிழ்ச்சி, கலந்துரையாடல் , விவாதம், நுண்ணறிவு, மக்களின் ஆசிகள், ஆக்கபூர்வமான விமர்சனங்கள் மற்றும் பலவற்றைப் போற்றுகிறேன். எதிர்காலத்திலும் சமமான ஈடுபாட்டுடன் கூடிய நேரத்தை எதிர்நோக்குகிறோம். இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.