பிரதமர் மோடி அவர்கள் “மேக் இன் இந்தியா” அறிமுகப்படுத்தி இன்றுடன் பத்து ஆண்டுகள் ஆகிறது. இதனை பிரதமர் மோடி எக்ஸ் பதிவில், மேக் இன் இந்தியா திட்டத்தை உருவாக்கி 10 வருடங்களை கடந்திருக்கிறோம். கடந்த பத்தாண்டுகளாக இந்த திட்டத்தை வெற்றிபெற அயராது உழைக்கும் அனைவரையும் நான் பாராட்டுகிறேன். ‘மேக் இன் இந்தியா’, நமது தேசத்தின் உற்பத்தி மற்றும் புதுமைகளின் அதிகார மையமாக மாற்றுவதற்கான, 140 கோடி இந்தியர்களின் கூட்டு உறுதியை விளக்குகிறது. இந்த திட்டத்தின் மூலம் பல்வேறு துறைகளில் ஏற்றுமதி உயர்ந்துள்ளதாகவும், இதனால் பொருளாதாரம் வலுப்பெற்றுள்ளது.
சாத்தியமான அனைத்து வழிகளிலும் ‘மேக் இன் இந்தியா’வை ஊக்குவிப்பதில் இந்திய அரசு உறுதிபூண்டுள்ளது. சீர்திருத்தங்களில் இந்தியாவின் முன்னேற்றங்களும் தொடரும் விதமாக, ஆத்மநிர்பர் மற்றும் விக்சித் பாரதத்தை உருவாக்குவோம் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இதுதொடர்பாக, மேக் இன் இந்தியாவின் 10 ஆண்டுகள் குறித்து, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறுகையில், “இது கடந்த பத்தாண்டுகளுக்கும், இழந்த பத்தாண்டுகளுக்கும் இடையிலான கதை.
2004 முதல் 2014 வரை காங்கிரஸ் ஆட்சியில் நமது நாடானது பரிதாபமான விரக்தி நிலையில் இருந்தது. முதலீட்டாளர்களின் ஆர்வம் சிதைந்திருந்தது, ஊழல் பரவியிருந்தது. காங்கிரஸின் ஆட்சிக் காலத்தில் பொருளாதாரம், அந்நியச் செலாவணி கையிருப்பு மற்றும் வளர்ச்சி குறைந்து இருந்தது, இதுமட்டும் அல்லாமல் உள்நாட்டு முதலீடுகள் கூட ஸ்தம்பிக்கும் நிலையில் தான் இருந்தது. ஆனால் காங்கிரஸ் ஆட்சிக்கு பிறகு மோடி ஆட்சியில் 2014 மற்றும் கடந்த பத்தாண்டுகளில் பொருளாதார அடிப்படை கட்டமைப்புகள் வலுவாக உருவாக்கப்பட்டன. ஸ்டார்ட் அப் இந்தியா, ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு, 20 புதிய தொழில்துறை ஸ்மார்ட் நகரங்கள், வணிகம் செய்வதற்கான எங்களின் தரவரிசையில் முன்னேற்றம், தொழில்நுட்பம் மற்றும் புதுமைகளை மேம்படுத்துதல், என அனைத்து துறைகளிலும் வெற்றிகரமாக நமது நாடு முன்னேறி வருகிறது. இன்று உலகம் இந்தியாவை உற்பத்தி செய்யும் இடமாக பார்க்கிறது.