பிரதமர் மோடி பார்ப்பதற்குத்தான் முரட்டுத்தனமாக இருக்கிறார். ஆனால், உள்ளுக்குள் மிகவும் மென்மையானவர் என்று வைரமுத்து பேசிய காணொளிதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழகத்திலுள்ள பிரபல கவிஞர்களில் ஒருவர் வைரமுத்து. இவர் திராவிட சிந்தனை உள்ளவர். ஆகவே, திராவிட கட்சிகளுக்கு ஆதரவாக பேசுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். அந்த வகையில், மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வரும் திட்டங்கள், செயல்பாடுகள் குறித்து கடுமையாக விமர்சிப்பதையும், தமிழகத்தில் தி.மு.க. அரசு கொண்டு வரும் திட்டத்தையும், அரசின் செயல்பாடுகளை பாராட்டுவதையும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார். இவர்தான், பாரத பிரதமர் மோடியை புகழ்ந்து பேசும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அதாவது, தமிழகத்தைச் சேர்ந்த நிகர்நிலைப் பல்கலைக்கழகம் ஒன்றில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய கவிஞர் வைரமுத்து, பிரதமர் மோடியை புகழ்ந்து தள்ளி இருக்கிறார். அதாவது, பிரதமர் மோடி ஒரு கவிதை நூலை எழுதி இருக்கிறார். இந்த நூலில் இடம்பெற்றிருக்கும் கவிதை ஒன்றில், என்னால் மரங்களை பகலில்தான் ரசிக்க முடிகிறது. இரவில் ரசிக்க முடியவில்லை என்று எழுதி இருக்கிறார். பல்கலைக்கழக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய வைரமுத்து, மேற்கண்ட பிரதமர் மோடியின் கவிதை வரிகளை சுட்டிக்காட்டி, இந்த நூலில் நான் பிரதமரை பார்க்கவில்லை. ஒரு மெல்லிய கவிஞனை பார்க்கிறேன். இயற்கையின் காதலனை பார்க்கிறேன்.
பிரதமரின் இந்த நூலை நீங்கள் வாங்கிக் கொண்டு வீட்டிற்குச் செல்லும்போது காரிலோ அல்லது பஸ்ஸிலோ அமர்ந்து கொண்டு படித்துப் பாருங்கள். அப்போது தெரியும், ஒரு மெல்லிய கவிஞன் மோடிக்குள் இருப்பது. ஒரு கவிஞன் தலைவனாகி இருக்கிறான். மோடி பார்ப்பதற்குத்தான் முரட்டுத்தனமாக இருக்கிறார். ஆனால், அவரது மனது மிகவும் மென்மையானதாக இருக்கிறது. மேலும், அந்த நூலில் நர்மதை நதியை குஜராத்தின் கைரேகை என்று குறிப்பிட்டிருக்கிறார். மேலும், பிரதமரின் கவிதையை வெளியிடும் வாய்ப்பு 16 ஆண்டுகளுக்குப் பிறகு எனக்கு வாய்த்திருக்கிறது.
2001-ல் பிரதமராக இருந்த வாய்பாயின் கவிதை நூலை அவரது இல்லத்திற்கே சென்று வெளியிட்டேன். அப்போது, பிரதமர் வாய்பாயிடம் சொன்னேன், நீங்கள் விரும்பினால் முன்னாள் பிரதமராக முடியும். ஆனால், எக்காரணம் கொண்டும் முன்னாள் கவிஞராக முடியாது என்று. அதேபோல, தற்போது மோடியின் கவிதை நூலை வெளியிடுகிறேன். இப்போதும் சொல்கிறேன், பிரதமர் மோடி விரும்பினால் முன்னாள் பிரதமராக முடியும். ஆனால், முன்னாள் கவிஞராக முடியாது என்று கூறியிருக்கிறார். இந்த காணொளி ஒரு சில வருடங்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சி என்று கூறப்படுகிறது. எனினும், வைரமுத்து இவ்வாறு பேசியிருப்பதால், இக்காணொளிதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.