காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி அமேதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் ரேபரேலி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனை பாஜக கடுமையாக விமர்சித்து வருகிறது.
மேற்கு வங்கத்தில் ஒரு பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) பேசிய பிரதமர் மோடி, “வயநாட்டில் தோற்றுவிடுவோம் என்ற பயத்தால் இளவரசர் போட்டியிட வேறு தொகுதியைத் தேடிக் கொண்டிருக்கிறார் என நான் ஏற்கெனவே சொல்லியிருந்தேன். இப்போது அமேதியிலிருந்து ஓடிப்போய் ரேபரேலியை அவர் தேர்வு செய்துள்ளார். இவர்கள்தான் ஊர் ஊராகச் சென்று அஞ்சாதீர்கள் எனப் பிரச்சாரம் செய்பவர்கள். நான் அவர்களுக்கு அதையே திருப்பிச் சொல்கிறேன். அச்சப்பட்டு ஓடாதீர்கள்” என்று கூறியுள்ளார்.
அதேபோல், பாஜக தொழில்நுட்பப் பிரிவு தலைவர் அமித் மாள்வியா தனது சமூக வலைதளப் பக்கத்தில், “இறுதியாக, ராகுல் காந்தி அமேதியை கைவிட்டுவிட்டார். இதில் ஆச்சரியப்படுவதற்கும் ஏதும் இல்லை. தோற்பவர்கள் இப்படித்தான் செய்வார்கள். அமேதியில் வெற்றி பெற முடியாது என்பதை தொகுதியை மாற்றியதன் மூலம் ராகுல் காந்தி நிரூபித்துவிட்டார். அப்படியிருக்க இனியும் இண்டியா கூட்டணியில் வாக்குகளை யாரும் வீணடிக்காதீர்கள். மூன்றாவது கட்ட தேர்தல் முதல் என்டிஏ கூட்டணிக்கு மக்கள் ஆதரவு இன்னும் அமோகமாக இருக்கும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.