அரசியல் கட்சிகள் தேர்தல் பேரணியில் எந்த வகையிலும் சிறுவர்களை பயன்படுத்தி பிரச்சாரங்களை மேற்கொள்வதற்கு இந்திய தேர்தல் ஆணையம் தடைவிதித்துள்ளது.
இன்னும் இரண்டு மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. அரசியல் கட்சிகள் அதற்கு தங்களை தயார்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், சிறுவர்களை தேர்தல் பிரச்சாரங்களில் பயன்படுத்துவதற்கு தேர்தல் ஆணையம் தடைவிதித்துள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது :
சுவரொட்டிகள் ஒட்டுதல், துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்தல், பிரச்சாரங்களில் முழக்கமிடுதல் உள்ளிட்ட தேர்தலுக்கு முன்னதான பிரச்சார பணிகளில் சிறுவர்களை ஈடுபடுத்தக்கூடாது. குழந்தைகளை பயன்படுத்தி தேர்தல் பிரச்சாரம் செய்யும் கட்சிகளிடம் தேர்தல் ஆணையம் எந்தவிதத்திலும் சகிப்புத்தன்மையுடன் நடந்துகொள்ளாது.
அரசியல் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் குழந்தைகளை கையில் ஏந்துவது, வாகனத்தில் அவர்களை ஏற்றிச் செல்வது, பேரணியில் அவர்களை பங்கேற்க வைப்பதும் தடை செய்யப்படுகிறது. மேலும், கவிதை, பாடல், பேச்சுவார்த்தை, அரசியல் கட்சி அல்லது வேட்பாளரின் சின்னங்களை காட்சிப்படுத்துவது போன்ற எந்த வகையிலான அரசியல் பிரச்சார சாயலை உருவாக்க குழந்தைகளை பயன்படுத்துவதற்கான தடை நீட்டிக்கப்படுகிறது. இவ்வாறு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.