கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த விவகாரம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வேங்கைவயலில் உள்ள 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்தத் தொட்டியில் இருந்து குடிநீர் விநியோகிக்கும் பணி நிறுத்தப்பட்டது.சிபிசிஐடி விசாரணை: இந்தச் சம்பவம் குறித்து வெள்ளனூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஏடிஎஸ்பி தலைமையில் 11 பேர் கொண்ட குழுவினர் விசாரித்து வந்தனர். எனினும், இந்தச் சம்பவத்தில் யாரும் கைது செய்யப்படாததால், இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக அரசு ஜன.14-ம் தேதி மாற்றியது.
நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த விவகாரம் ஒரு வருடம் மேலாகியும், இதுவரை இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் வேங்கைவயல் கிராம மக்கள் வரும் மக்களவை தேர்தலை புறக்கணிக்க போவதாக தெரிவித்துள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசால் இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளையே கண்டுபிடிக்க முடியவில்லை. மக்களின் பிரச்சனைகளையும் குறைகளையும் தீர்க்க கையாலாகாத திமுக அரசு தேர்தலுக்காக வெற்று வாக்குறுதிகளை கொடுத்து பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதனாலேயே பல இடங்களில் திமுக வேட்பாளர்களை மக்கள் துரத்தி அடிக்கின்றனர். இவ்வாறு சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் திமுகவை வறுத்தெடுத்து வருகின்றனர்.