பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசிய ஒரிஜினல் ஆடியோ என்னிடம் இருக்கிறது, கோர்ட்டில் வெளியிடத் தயார் என்று பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியிருப்பதால், அறிவாலயம் ஆட்டம் கண்டிருக்கிறது.
பிரதமர் மோடியின் மன் கி பாத் 100-வது நிகழ்ச்சியை, சென்னை நடுக்குப்பத்தில் கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுடன் அமர்ந்து பார்வையிட்ட தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தொடர்ந்து நிருபர்களிடம் பேசுகையில், “தி.மு.க.வினரின் சொத்துப் பட்டியலை வெளியிட்டதற்காக எம்.பி. கனிமொழி எனக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். அதில், அவர் கலைஞர் தொலைக்காட்சியில் தான் பங்குதாரர் இல்லை என்று குறிப்பிடவில்லை. சில மாதங்களுக்கு முன்பு வரை இருந்ததாகவும், அதன் பிறகு பங்குகளை விற்றுவிட்டதாகவும் தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் அவர் பங்குதாரராக இருந்ததை ஒப்புக் கொண்டிருக்கிறார். பங்குகளை விற்றிருந்தால் அந்த பணம் எங்கே போனது? ஒவ்வொருவரின் சொத்து மதிப்புதான் எனது குற்றச்சாட்டு.
நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் ஆடியோவானது, அவர் அளித்திருக்கும் ஒப்புதல் வாக்குமூலம். இந்த விஷயத்தில் அவர் குற்றவாளி இல்லை. என்ன நடக்கிறது என்பதைத்தான் தெரிவித்திருக்கிறார். வழக்கு கோர்ட்டுக்கு போகும்போது, அவர் பேசிய ஒரிஜினல் ஆடியோவையும், எங்கே, எப்போது, யாரிடம் பேசப்பட்டது என்பதையும் கொடுக்க தயாராக இருக்கிறேன். கட்சியின் தலைவர் பதவியில் இருக்கும் எனக்கு, எனக்கான பாதையை அமித்ஷா, நட்டா ஆகியோர் ஏற்கெனவே வகுத்துத் தந்துவிட்டார்கள். இப்படித்தான் நீங்கள் செயல்பட வேண்டும் என்று அவர்கள் கொடுத்த அறிவுரைகளை ஏற்பதுதான் எனது வேலை.
மெட்ரோ ரெயில் முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ.யிடம் நான் புகார் கொடுத்திருக்கிறேன். ஜி ஸ்கொயர் சோதனைக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அந்நிறுவனம் பற்றி நான் புகார் அளிக்கவும் இல்லை. 6 நாட்கள் சோதனை நடந்ததில் இருந்து ஏதோ பெரிய விஷயம் இருக்கிறது என்பது மட்டும் தெரிகிறது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு 2,010 கோடி றூபாய் சொத்து மதிப்பு என்று நான் தெரிவித்ததை அவர் மறுத்திருக்கிறார். ஒருவேளை, நமது சொத்து மதிப்பு 20,000 கோடி ரூபாயாச்சே, வெறும் 2,000 கோடி ரூபாய் என்று குறைத்து சொல்லிவிட்டாரே என்று வருத்தப்படுகிறாரோ என்னவோ? வழக்கு கோர்ட்டுக்கு வரட்டும். கோர்ட்டில் சொல்வதற்கு இன்னும் பல விஷயங்கள் இருக்கின்றன” என்று கூறியிருக்கிறார். இதனால் தி.மு.க. தலைமை ஆட்டம் கண்டிருக்கிறது.