தி.மு.க. 10 சீட் கூட பெற முடியாத கட்சியாக கூட மாறலாம் என அமைச்சர் தியாகராஜன் பேசியிருப்பது அக்கட்சியினர் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தி.மு.க.வின் மூத்த தலைவரும், நிதியமைச்சருமாக இருப்பவர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன். இவர், நக்கல், நையாண்டியாக பேசுவதையே வாடிக்கையாக கொண்டவர். அந்த வகையில், இவர் தெரிவிக்கும் கருத்துக்கள் தி.மு.க.வினரையும் பதம் பார்த்து விடும். யாரேனும், இவரிடம் கேள்வி கேட்டால் நான் யார் தெரியுமா? என் தாத்தா யார் தெரியுமா? எனது நைனா யார் தெரியுமா? என்று பேச கூடியவர். அதேவேளையில், எனது படிப்பு என்ன தெரியுமா? என்று தற்பெருமை பேசுவதையே வழக்கமாக கொண்டவர்.
அந்தவகையில், மதுரை 14-வது வட்ட தி.மு.க. சார்பாக புதூர் பேருந்து நிலையம் அருகே பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் மற்றும் கிறிஸ்துமஸ் என முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில், ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதையடுத்து, நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசும் போது இவ்வாறு கூறினார் ; “கடந்த ஆண்டு எப்படிச் சாதனை படைத்தோமோ, அதேபோல வரும் ஆண்டிலும் நிதித்துறையில் ஒரு முன்னேற்றத்தைக் காண்போம்.
பதவிகள் வரும் போகும். 10 சீட்டு கூட பெற முடியாத கட்சியாக தி.மு.க. மாறலாம். எத்தனை பதவிகள் வந்தாலும் நான் பி.டி.ஆர். மகன். அதற்கு, மேல் யாராலும் எனக்கு எந்த பதவியையும் கொடுக்க முடியாது என்று கூறியுள்ளார். மூத்த அமைச்சரின் இந்த கருத்து மேடையில் இருந்தவர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தன. பி.டி.ஆரின் நிகழ்ச்சிகளில் மதுரை மாவட்ட செயலாளர்கள் தலைக்காட்டுவது இல்லை என்று சொல்லப்படுகிறது. அந்த, கோவத்தில் தான் அமைச்சர் இவ்வாறு பேசியிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.