புதுச்சேரி முத்தியால்பேட்டை சிறுமி கொலை வழக்கு விவகாரத்தில், சிறப்பு குழு தனது விசாரணையை இன்று தொடங்கியுள்ளது.
புதுச்சேரியில் சிறுமி கொலை வழக்கில் முழு விசாரணை நடத்த, ஐபிஎஸ் அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு குழு அமைத்து புதுச்சேரி அரசு நேற்று இரவு உத்தரவு வெளியிட்டது.
இதையடுத்து இந்தக் குழு சிறுமி கொலை வழக்கு ஆவணங்களை பெற்று கொண்டு, விசாரணையை இன்று காலை தொடங்கியது. சந்தேகத்தின் பேரில் போலீஸ் காவலில் இருக்கும் மற்ற ஐந்து நபர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
சிறுமி கொலை செய்யப்பட்ட விவேகானந்தன் வீட்டில், இன்று காலை தடய அறிவியல் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அங்குள்ள தடயங்களை சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
விசாரணை தொடர்பாக போலீஸ் வட்டாரங்களில் கூறுகையில், குற்றவாளிகள் இரண்டு பேர் மற்றும் சந்தேகப்படக்கூடிய ஐந்து நபர்களின் ரத்த மாதிரிகள் சோதனைக்காக, ஜிப்மர் ஆய்வுகத்துக்கு அனுப்பி வைக்கபட்டு உள்ளது என்று குறிப்பிட்டனர்.
முன்னதாக, குற்றவாளிகள் மீது போக்ஸோ, வன்கொடுமை தடுப்புச் சட்டங்கள் பதியப்பட்டன.
இதற்கிடையே, சிறுமி கொலையில் போலீஸார் அலட்சியம் காட்டியதாக எழுந்த புகாரையடுத்து, முத்தியால்பேட்டை காவல் நிலைய அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை கூண்டோடு மாற்ற அம்மாநில முதல்வர் ரங்கசாமி அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.