புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் எம்.ஜி.ஆர். சிலையிலிருந்து, அரசு மகளிர் கலைக் கல்லூரி வரை இருக்கும் மின்விளக்கு கம்பங்களில் உதயசூரியன் சின்னம் பொருத்தப்பட்டிருப்பது பொதுமக்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது, தமிழகத்தின் பெரும்பாலான நகர்ப்புறங்களில் சாலையின் சென்டர் மீடியன்களில் உள்ள மின்கம்பங்களில் இருந்த மின்விளக்கு பொருத்தப்படும் பைப்புகள் அகற்றப்பட்டு, இரட்டை இலை வடிவிலான பைப்புகள் பொருத்தப்பட்டன. அந்த வகையில், புதுக்கோட்டை நகரிலும் பழைய பேருந்து நிலையம் முதல் அரசு மகளிர் கல்லூரி வரை சாலையின் நடுவே இருந்த மின்கம்பங்களின் பைப்புகள் இரட்டை இலை வடிவத்தில் இருப்பதுபோல மாற்றி அமைக்கப்பட்டன. அப்போது, இது பொதுமக்களால் பெரிதும் விமர்சிக்கப்பட்டது.
மேலும், பொது இடங்களில் கட்சிச் சின்னங்களை வைக்கக் கூடாது என்கிற உத்தரவை மீறி, அரசு நிதியில் வைக்கப்பட்டிருக்கும் இரட்டை இலைச் சின்ன மின்கம்பங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்று 2020-ம் ஆண்டு புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் செல்லப்பாண்டியன் தலைமையில் அக்கட்சியினர் திரண்டு சென்று கலெக்டரிடம் மனு கொடுத்தனர். இதையடுத்து, இரட்டை இலை வடிவிலான மின்கம்பங்கள் உடனடியாக அகற்றப்பட்டு, பழைய மாதிரியான மின்கம்பங்கள் வைக்கப்பட்டன.
இந்த நிலையில், 2021 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தி.மு.க. ஆட்சியைக் கைப்பற்றியது. இந்த சூழலில், கடந்த மாத இறுதியில் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணத்தை தொடங்கி இருக்கும் முதல்வரும் தி.மு.க. தலைவருமான ஸ்டாலின், தனது அரசின் ஓராண்டு சாதனை குறித்து விளக்கி வருவதோடு, நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகிறார். அந்த வகையில், இன்று நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக புதுக்கோட்டை செல்கிறார். இதையொட்டித்தான், புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் எம்.ஜி.ஆர். சிலையிலிருந்து அரசு மகளிர் கலைக் கல்லூரி வரை உள்ள மின்கம்பங்களில் உதயசூரியன் சின்னம் வடிவிலான மின்விளக்குக் கம்பங்களை பொருத்தி இருக்கிறார்கள் தி.மு.க.வினர். இதுதான் பொதுமக்களை முகம்சுளிக்க வைத்திருக்கிறது.
அன்றையதினம் அ.தி.மு.க. ஆட்சியில் இரட்டை இலை வடிவம் போன்ற மின்கம்பங்கள் வைக்கப்பட்டபோது, கண்டித்து மனு கொடுத்து குரல் எழுப்பிய தி.மு.க., இன்று தாங்கள் ஆட்சியமைத்ததும் அ.தி.மு.க. செய்த அதே தவறை செய்வதோடு, தங்கள் கட்சியின் சின்னத்தை மின்கம்பங்களில் திணிப்பது முறையல்ல. ஆகவே, மாவட்ட நிர்வாகம் இவ்விஷயத்தில் தலையிட்டு உடனடியாக உதயசூரியன் சின்னம் பொருத்தப்பட்டிருக்கும் மின்கம்பங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குரல் கொடுக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.