எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காக வைத்திருந்த செங்கல்லை திருடிவிட்டதாக உதயநிதி மீது பா.ஜ.க சார்பில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.
தி.மு.க. இளைஞர் அணி செயலாளராகவும், சென்னை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியின் எம்.எல்.ஏ.வாகவும் இருப்பவர் உதயநிதி. தமிழக முதல்வராக இருக்கும் ஸ்டாலினின் மகனான இவர், 2021 சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது, ஒரு செங்கல்லை கையில் வைத்துக் கொண்டு இதுதான் எய்ம்ஸ் என்று கிண்டல் செய்து பிரசாரம் செய்தார். அதாவது, மத்திய அரசு அறிவித்த மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டடப் பணிகள் துவங்காததை கிண்டல் செய்யும் விதமாக, இவ்வாறு அவதூறு பிரசாரம் செய்தார். இது பா.ஜ.க.வினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு, தி.மு.க. பிரமுகர் ஒருவரின் இல்ல திருமண விழா நடந்தது. இதில், உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது, அவருக்கு தி.மு.க. நிர்வாகிகள் சார்பில் ‘எய்ம்ஸ்’ என்று எழுதப்பட்ட செங்கல் வடிவம் பரிசாக வழங்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த புதுக்கோட்டை பா.ஜ.க.வினர், ‘எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்காக வைத்திருந்த செங்கல்லை, உதயநிதியும், புதுக்கோட்டையைச் சேர்ந்த தி.மு.க. நிர்வாகிகளும் திருடி விட்டனர். ஆகவே, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும்’ என்று புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் நேற்று புகார் செய்தனர். இச்சம்பவம்தான் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.