பாரத சுதந்திரப் போரின் முதல் விடுதலை வீரன் என்ற புகழை பெற்றுள்ள பூலித்தேவனின் வரலாறு மிகவும் மர்மங்கள் நிறைந்ததாகவே இருக்கிறது. அவருடைய உறுதியும் ஆங்கிலேயரை எதிர்த்து இறுதி வரை போராடும் போர் குணமும் அவருக்கு பின்னால் வந்த விடுதலை வீரர்களுக்கு ஒரு நல்ல முன்னுதாரணமாக திகழ்கின்றன. தமிழகம் முழுவதற்கும் ஏன் அவருடைய சொந்த ஊரான நெற்கட்டும் சேவல் எனும் ஊரிலும் அவருடைய வீர வரலாறு இன்று வரை போற்றப்படுகிறது.
சித்திர புத்திரத் தேவர் ,சிவஞான நாச்சியார் ஆகியோரின் மகனாக மாவீரன் பூலித்தேவன் 01.09. 1715இல் தோன்றினார். இவரது இயற்பெயர் “காத்தப்ப பூலித்தேவன்” என்பதாகும்.
சிறுவயதிலேயே முன்னோர் பெருமைகளை பற்றி கேள்விப்பட்டதால் தாமும் அவர்களைப் போல் பெரும் புகழும் பெற்றுத் திகழ வேண்டும் என்ற உறுதி பூலித்தேவர் மனதில் இருந்தது.
இலஞ்சியைச் சேர்ந்த சுப்பிரமணிய பிள்ளை என்பவரிடம் சன்மார்க்க நெறிகளை பூலித்தேவன் பயின்று வந்தார். மற்ற தமிழ் ,இலக்கண இலக்கிய நூல்களையும் கற்று தாமே கவிதை எழுதும் அளவுக்கு திறம் பெற்று விளங்கினார்.
பூலித்தேவருக்கு 12 வயதான பொழுது அவருக்கு போர்ப் பயிற்சி,குதிரை ஏற்றம், யானை ஏற்றம் ,மல்யுத்தம், வாள் வீச்சு, வேல் எய்தல், அம்பு எய்தல், சிலம்பு வரிசைகள், கவண் எறிதல் வல்லயம் எறிதல் மற்றும் சுருள்பட்டா சுழற்றுதல் போன்ற சகல விதமான வீர விளையாட்டுகளிலும் அவருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள புலிகளை கொன்று விளையாடுவதில் அவருக்கு மிகுந்த விருப்பம். அவரது திறமையை கண்ட அவரது பெற்றோர் அவருடைய 12வது வயதில் அவருக்கு பட்டம் சூட்டி அரசர் ஆக்கினார்கள்.
1857-ல் நடைபெற்ற முதல் சுதந்திரப் போரில் பங்கு கொண்ட மங்கள் பாண்டே என்ற வீரனுக்கு மிகவும் முன்பாகவே தர்மத்தை நிலை நாட்ட ராஜ ராஜ சோழன் பிறந்த மண்ணிலிருந்து தோன்றிய ஹிந்து வீரன் தான் நமது பூலித்தேவன். மகாதேவர் சிவபெருமானின் தீவிர பக்தனான இந்த வீரர் தனது பெயருக்கு ஏற்றார் போலவே விளங்கினார்.
தனது ஒப்பற்ற போர் திறமையினாலும் அரசியல் அறிவினாலும் தன்னுள் கொழுந்து விட்டு எறிந்த வீரத்தினாலும் புலித்தேவன் பிறவியிலேயே ஒரு புரட்சிக்காரனாக விளங்கினார்.
அசட்டுத்தனமான புரட்சி வீரனாக இல்லாமல் அதர்மத்தை எதிர்த்து லட்சிய நோக்கு கொண்ட புரட்சி வீரனாக விளங்கினார்.
தான் பிறந்த மண்ணில் தனது வீரத்தால் பெயரைப் பெற்ற எந்த ஒரு புரட்சி வீரனின் வாழ்க்கையை பதிவு செய்யும்போதும் எந்தவிதமான சிக்கல்களும் திருப்பங்களும் எழுமோ அதேபோல பூலித்தேவனின் வாழ்க்கையும் அமைந்துள்ளது.
1715 ல் பிறந்த பூலித்தேவன் தனது 18 வது வயதில் அவருடைய ஊரைச் சுற்றியுள்ள 150 கிராமங்களின் தலைவனாக குறுநில மன்னனாக தலைமையேற்றார். ஆனால் அவருடைய வேலை அத்தனை எளிதாக இருக்கவில்லை. 1759 இல் ஹைதராபாத் நிஜாம் மற்றும் ஆற்காடு நவாப் ஆகியோரால் தென்னகப் பகுதிகளில் வரி வசூல் செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஆங்கிலேயனின் பிரதிநிதியான கான்சாகிப் என்பவன் பூலித்தேவன் இடம் இருந்து விளைச்சலில் ஒரு பகுதியாக அறுவடை செய்யப்பட்ட நெல்லை வரியாக பெற்றிட வந்து சேர்ந்தான்.
நெற்பயிரை வரியாக கேட்டு வந்த கான்சாகிப்பை எதிர்த்து வரி கொடேன் என்று பூலித்தேவன் மறுத்ததால் இப்பகுதியானது இன்றும் நெற்கட்டான் சேவல் என்று வழங்கப்படுகிறது.
வரி கொடேன் என்று தைரியமாக எதிர்த்து நின்ற பூலித்தேவனை எதிரிகள் தாக்க ஆங்கிலேய படை அணியிலே பூலித்தேவனின் ஒற்றனாக இருந்து வந்த ஹெரான் என்ற தளபதியின் மொழிபெயர்ப்பாளர் மூலமாக ஆங்கிலேயருடைய படைபலம் மிகவும் குறைவாக உள்ளது என்பதை பூலித்தேவன் அறிந்து கொண்டார்.
இதனை அறிந்த பூலித்தேவன் எதிரிகளின் தாக்குதலை மேலும் தீவிரமாக தடுத்திட முடிவு செய்தார். ஆங்கிலேய தளபதி ஹெரான் மிகக் கடுமையான பீரங்கி தாக்குதலுக்கு உத்தரவிட்ட போதும் பூலித்தேவனின் கோட்டை சுவர்கள் மிகவும் பலமானதாக இருந்ததால் தாக்குதல் பயனளிக்கவில்லை.
மேற்கொண்டு தாக்குதல் நடத்த தேவையான வெடி மருந்துகள் கைவசம் இல்லாத நிலையில் தளபதி ஹெரான் 20 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடாக பெற்று சமாதானம் செய்து கொள்ள பூலித்தேவனுக்கு தூது அனுப்பினான்.
ஆங்கிலேயரின் உள்நோக்கத்தை அறிந்த பூலித்தேவன் தனக்கு அவ்வளவு வருமானம் இல்லை என்றும் அப்படி இருந்தாலும் ஆங்கிலேயர்களுக்கு அடிபணிந்து ஒரு ரூபாய் கூட வரியாகவோ, நஷ்ட ஈடாகவோ தர முடியாது என்று வீரமாக பதில் உரைத்தார்.
கோட்டயம் விழவில்லை பூலித்தேவனும் சரணடையவில்லை என்கிற நிலையிலே மறவர்கள் இடம் மிகவும் பரிதாபகரமாக தோல்வியுற்ற ஆங்கில படை அவமானத்துடன் பின்வாங்கியது. இவ்விதம் ஆங்கிலேயர்கள் தோல்வியுற்ற சம்பவமானது 1766 இல் ஆங்கிலேயர்களுக்கு எதிராக மிகப்பெரும் ஒரு புரட்சியாக வெடித்ததில் ஒரு முக்கிய பங்காற்றியது.
பூலித்தேவனின் இந்த வெற்றியை கேள்விப்பட்ட அக்கம்பக்கத்தை ஹிந்து வீரர்கள் பூலித்தேவனின் தலைமையின் கீழ் ஒன்று திரண்டு ஆங்கிலேயர்கள் வரி வசூல் செய்யும் அராஜகத்தை வீரத்துடன் எதிர்க்க ஒன்று திரண்டனர். ஆங்கிலத் தளபதி ஹெரான் பின்வாங்கியவுடன் பூலித்தேவனின் தலைமையின் கீழ் ஒன்று திரண்ட மறவர்கள் தென்னகம் முழுவதும் நிலப் பகுதிகளை தங்கள் வசம் எடுத்துக் கொள்ள வீரத்துடன் முனைந்தனர்.
மறவர்களின் போர்படையானது ஆக்ரோஷம் கொண்டதாகவும் வீரம் செறிந்த தாக்குதலுக்கு பெயர் போனதாகவும் விளங்கியதால் பல்வேறு கிராமங்களில் நிலை கொண்டிருந்த ஆங்கிலேய படையின் சிறு சிறு பிரிவுகள் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் பின்வாங்கி ஓடினர். இதன்மூலம் தென்னகம் முழுவதும் பூலித்தேவனின் தலைமையின் கீழ் போராடிய மறவர்களின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது.
ஆங்கிலேயர்களின் பிரதிநிதியாக வரிவசூல் செய்யும் அதிகாரம் பெற்றிருந்த கான்சாகிப்பின் சோர்வடைந்த படைவீரர்களுக்கு எதிராக மிகுந்த துடிப்பும் வீரகமும் கொண்ட அனைத்து சாதிப் பிரிவினரும் கலந்திருந்த பூலித்தேவனின் ஆக்ரோஷமான படைகள் தங்களது திடீர் தாக்குதலினால் வெற்றி மேல் வெற்றி பெற்றனர்.
அடிபட்ட பாம்பாக பின்வாங்கியுள்ள ஆங்கிலேய படைகள் எந்நேரத்திலும் பெரும் வலிமையோடு திருப்பித் தாக்குதல் நடத்தக்கூடிய வாய்ப்பு உள்ளதை பூலித்தேவன் அறிந்திருந்தார். படை நடத்தும் வீரத்தோடு அரசியல் அறிவும் வாய்க்கப் பெற்ற புலித்தேவன் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் அரசராக விளங்கிய மார்த்தாண்டவர்மனின் ஆதரவை கேட்டு தனது தளபதி ஒருவரை தூதுவராக அனுப்பி வைத்தார்.
பூலித்தேவனின் தலைமையின் கீழ் ஒன்று திரண்டுள்ள மறவர்களின் போர்ப்படையானது அந்நிய சக்தியான ஆங்கிலேயர்களுக்கு எதிராக தொடுத்து வரும் நியாயமான போரினை பற்றி எடுத்துக் கூறி மன்னரின் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தினார் பூலித்தேவனின் தளபதி. இத்தகைய ராஜதந்திர நடவடிக்கை நாள் திருவிதாங்கூர் மன்னன் நான்காயிரம் வீரர்கள் கொண்ட ஒரு படையை பூலித்தேவனுக்கு அனுப்பி வைத்தார்.
அந்த நேரத்திலே மதுரையின் கவர்னராக விளங்கிய முகமது அலி என்பவனுடைய தம்பியான மகபூஸ்கான் என்பவனை எதிர்த்து பூலித்தேவனின் படைகளும் திருவிதாங்கூர் மன்னனின் படைகளும் உக்கிரமாக போரிட்டன. எதிரிகள் தங்கி இருந்த களக்காடு கோட்டையை பூலித்தேவனின் படைகள் சூழ்ந்து முற்றுகையிட்டன. ஏற்கனவே பெற்ற வெற்றிகளினால் மிகவும் உற்சாகமடைந்த மனநிலையில் பூலித்தேவனின் படைகள் ஆக்ரோஷமான தாக்குதலை நடத்தினார்கள்.
இந்த முற்றுகையை உடைத்து விட மகபூஸ்கான் தன்னுடைய முழு குதிரை படையையும் அனுப்ப வேண்டி இருந்தது. இந்நேரம் பார்த்து திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாப்ளா முஸ்லிம்கள் புரட்சி செய்ததால் திருவிதாங்கூர் படைகள் அவசரமாக ஊர் திரும்ப நேரிட்டது. இந்த எதிர்பாராத நிகழ்வினால் தோல்வி அடைவது நிச்சயம் என்ற நிலையில் பூலித்தேவனின் படைகள் பின்வாங்கின.
1775இல் ஆங்கிலேயத் தளபதி டொனால்ட் கேம்பல் என்பவனால் வழிநடத்தப்பட்ட ஆற்காடு நவாபின் படைகள் துப்பாக்கிகளாலும் விலங்குகளாலும் பூலித்தேவனின் படையை மிகுந்த பலத்தோடு தாக்கினார்கள். இது நாள் வரை கைகொடுத்து வந்த போர் உத்திகள் அனைத்தும் தோற்கடிக்கப்பட முன்பு கூலி தேவனால் தோற்கடிக்கப்பட்ட விரட்டப்பட்ட அலெக்சாண்டர் ஹெரான் என்கிற ஆங்கில தளபதியும் எதிரிகளோடு சேர்ந்து கொள்ள பூலித்தேவன் ஆற்காடு நவாபின் படைகளால் தோற்கடிக்கப்பட்டு கைது செய்யப்படுகிறார்.
கைது செய்யப்பட்ட பூலித்தேவனை எதிரிப் படைகள் அவரது சொந்த ஊருக்கு அழைத்து வரும்பொழுது வரும் வழியில் ஒரு அதிசயம் நிகழ்கிறது. பூலித்தேவனை சங்கரன்கோயில் வழியாக அழைத்து வரும்பொழுது தான் ஒருமுறை சங்கரன்கோயில் ஆலயத்தில் உள்ளே வழிபாடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை பூலித்தேவன் முன்வைக்கிறார் . இதற்கு மேல் செய்வதற்கு ஒன்றுமில்லை என்கிற நிலையில் சங்கரன்கோயில் ஆலயத்திற்குள் இறைவழிபாடு செய்ய அனுமதிக்கப்பட்ட பூலித்தேவன் கம்பீரமாக கோவிலுக்குள் நுழைகிறார்.
பூலித்தேவனின் வாழ்க்கையில் இந்த நிகழ்ச்சியானது மேலும் தெளிவான செய்திகள் இல்லாமலேயே நிறைவு பெறுகிறது. ஒரு சிலருடைய கருத்தின் படி கோயிலின் உள்ளே அமைந்திருந்த சுரங்கப்பாதை வழியாக புலித்தேவன் தப்பித்து காட்டுப் பகுதிக்கு சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் தென்னகப் பகுதிகளில் உள்ள நாட்டுப்புற கலைகளில் பூலித்தேவன் சங்கரன்கோயில் உள்ளே அமைந்திருக்கக் கூடிய அவரது வழிபாட்டிற்குரிய இஷ்ட தெய்வமான சிவபெருமானின் லிங்கத்திருமேனியோடு இரண்டற கலந்து விட்டதாகவே இன்றும் மக்கள் நம்புகின்றனர்.
பூலித்தேவனின் அரசியல் சாதுரியம் இன்று வரை பெருமிதத்தோடு பேசப்படுகிறது. ஆங்கிலேயருக்கு அடி பணிந்து போகாமல் சலுகைகள் கேட்காமல் தன் உயிரை பொருட்படுத்தாமல் போராடிய பூலித்தேவன் இன்றளவும் ஒரு சரித்திர நாயகனாக மக்களின் மனதில் இடம் பெற்றுள்ளார்.
- செல்வி. அனுக்ரஹா