புனேவில் கல்லூரி மாணவியிடம் அத்துமீற முயன்றதாக, உணவு விநியோகம் செய்யும் ரயீஸ் ஷேக் என்கிற நபர் கைது செய்யப்பட்டதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
புனே நகரின் யெவலேவாடி பகுதியிலுள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், 19 வயதான இளம்பெண் ஒருவர் தங்கி இருந்து, பொறியியல் கல்வி படித்து வருகிறார். இவர், கடந்த 17-ம் இரவு ஜூமோட்டோ உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில், இரவு உணவு ஆர்டர் செய்திருக்கிறார். சுமார் 9 மணியளவில் உணவு டெலிவரி செய்ய 40 வயதான நபர் வந்திருக்கிறார். அந்த மாணவியின் வீடு 5-வது மாடியில் இருப்பால், ஏறி வந்த களைப்பில் தாகமாக இருப்பதாகக் கூறி குடிப்பதற்கு தண்ணீர் கேட்டிருக்கிறார் அந்த நபர். மாணவியும் தண்ணீர் எடுப்பதற்காக உள்ளே சென்றிருக்கிறார். அப்போது, வீட்டை நோட்டம் விட்ட அந்த நபர், மாணவி தனியாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
பின்னர், மாணவி தண்ணீர் கொண்டு வந்து கொடுத்ததும் குடித்து விட்டு, அந்த மாணவியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்ததோடு, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டிருக்கிறார். உடனே அந்த மாணவி கூட்டலிட்டவே, பயத்தில் கீழே இறங்கி ஓட முயற்சித்திருக்கிறார் அந்த நபர். ஆனால், சத்தம் கேட்டு கீழ் தளத்தில் இருக்கும் சிலர் ஓடிவந்து, அந்த நபரைப் பிடித்து நையப்புடைத்தனர். விசாரணையில், அவரது பெயர் ரயீஸ் ஷேக் என்பது தெரியவந்தது. இதன் பிறகு, அடுக்குமாடி குடியிருப்பில் இருப்பவர்களின் உதவியோடு, கோந்த்வா காவல் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் சச்சின் கெத்மாலிஸ் தலைமையிலான போலீஸார் விரைந்து வந்து, விசாரணை நடத்தி, ரயீஸ் ஷேக்கை கைது செய்தனர்.