தனது கன்னத்தில் தேசியக் கொடியை வரைந்து கொண்டு, பஞ்சாப் பொற்கோயிலுக்குள் நுழைய முயன்ற பெண்ணிடம், இது இந்தியா அல்ல, பஞ்சாப் என்று சொல்லி, காலிஸ்தானி அனுமதி மறுத்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சீக்கியர்களின் புனிதத் தலமாகக் கருதப்படும் குருத்வாரா பொற்கோயில், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் அமைந்திருக்கிறது. தமிழக ஹிந்துக்கள் பழனிக்கும், சபரிமலைக்கும் புனித யாத்திரை செல்வதுபோல, சீக்கியர்கள் இக்கோயிலுக்கு புனித யாத்திரை மேற்கொள்வது வழக்கம். இந்த சூழலில், ஒரு பெண் தன்னுடைய முகத்தில் இந்திய மூவர்ணக் கொடியை வரைந்து கொண்டு, சமீபத்தில் குருத்வாரா பொற்கோயிலுக்குச் சென்றார். ஆனால், கோயில் வாயிலில் பாதுகாப்புப் பணியில் இருந்த ஒருவர், அப்பெண்ணைத் தடுத்து நிறுத்தினார்.
இதையடுத்து, எதற்காக தடுக்கிறீர்கள் என்று அப்பெண் கேள்வி எழுப்பவே, அதற்கு அந்த நபர், முகத்தில் மூவர்ணக் கொடியுடன் கோயிலின் உள்ளே நுழைய அனுமதி கிடையாது என்று உறுதியாக சொல்லி அனுமதி மறுத்திருக்கிறார். இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. நிறைவாக, அப்பெண் இது இந்தியாவின் கொடி என்று சொல்லவே, பதிலுக்கு அந்த நபர், இது பஞ்சாப்… இந்தியா அல்ல என்று திமிறாகக் கூறுகிறார். இந்தக் காட்சிகள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், கடும் சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது.
பஞ்சாப்பில் சமீபகாலமாகவே மீண்டும் காலிஸ்தான் கோரிக்கை வலுத்து வருவது குறிப்பிடத்தக்கது. காலிஸ்தான் ஆதரவாளரான வாரிஸ் பஞ்சாப் தே என்ற அமைப்பின் தலைவர் அம்ரித் பால் சிங், சமீபத்தில் தனது ஆதரவாளர்களுடன் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு குற்றவாளியை கடத்திச் சென்றார். இதையடுத்து, அவரது உதவியாளர்கள், ஆதரவாளர்களை பஞ்சாப் அரசு கைது செய்தது. இதனால், அமெரிக்கா, லண்டன், கனடா உள்ளிட்ட நாடுகளில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்திய தூதரகம் மீது தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.