கடந்த ஆறாம் தேதி தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. அப்போது பிஏ., எல்எல்பி இறுதியாண்டு படிக்கும் இரண்டு மாணவர்கள் தங்களுடன் படிக்கும் சக மாணவர் ஒருவருக்கு குளிர்பானத்தில் சிறுநீர் கலந்து ஏமாற்றி குடிக்க வைத்துள்ளனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவர் சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தர் நாகராஜ், பதிவாளர் பாலகிருஷ்ணன் ஆகியோரிடம் கடந்த 10ஆம் தேதி புகார் அளித்தார்.
புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட உதவி பேராசிரியர் தலைமையான விசாரணை குழு, துணைவேந்தர் மற்றும் பதிவாளரிடம் தனது அறிக்கையை சமர்ப்பித்தது. அப்போது ராகிங் செய்தது உறுதி செய்யப்பட்டதை அடுத்து சம்பந்தப்பட்ட இரண்டு மாணவர்களின் மீது துறை ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் நடவடிக்கை எடுக்க இக்குழு பரிந்துரைத்துள்ளது. பதிவாளர் பாலகிருஷ்ணன் ராம்ஜிநகர் போலீசில் சம்பந்தப்பட்ட இரண்டு மாணவர் மீது புகார் அளித்தார். இதையடுத்து வழக்குப் பதிவு செய்த ராம்ஜிநகர் போலீசார், விசாரித்து வருகின்றனர்.
இரண்டு மாணவர்களும் ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில், துணைவேந்தர் தலைமையிலான 9 பேர் கொண்ட ராகிங் தடுப்பு குழு கூட்டம் பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்தது.
இதில் ராகிங் ஈடுபட்ட இரண்டு மாணவர்களும் நடப்பு கல்வி ஆண்டில் (2023 – 2024) பத்தாவது பருவத் தேர்விற்கு படிக்க தடை விதித்துள்ளது. அதற்கு பதிலாக பத்தாவது பருவத்தை அடுத்த ஆண்டு (2024 – 2025) படிக்கலாம் என பரிந்துரைத்துள்ளது. பரிந்துரையை பல்கலை நிர்வாகக் குழு அடுத்த வாரம் இறுதி செய்யும் என பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.