சோரஸுடன் இணைந்து பா.ஜ.க. அரசை கவிழ்க்க ராகுல் சதி: ஸ்மிருதி இரானி குற்றச்சாட்டு!

சோரஸுடன் இணைந்து பா.ஜ.க. அரசை கவிழ்க்க ராகுல் சதி: ஸ்மிருதி இரானி குற்றச்சாட்டு!

Share it if you like it

அமெரிக்க தொழிலதிபர் சோரஸுடன் இணைந்து மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசை கவிழ்க்க ராகுல் காந்தி சதி செய்வதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி குற்றம்சாட்டி இருக்கிறார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் அமெரிக்காவுக்குச் சென்று விட்டு திரும்பினார். அப்போது அவர், அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸ் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் பலருடன் நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இதுகுறித்து வீடியோ பதிவிட்ட பா.ஜ.க. தகவல் தொழில்நுட்ப பிரிவுத் தலைவர் அமித் மாளவியா மீது கர்நாடகா போலீஸார் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள்.

இந்த நிலையில், இதுகுறித்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “ராகுல் காந்தியின் அமெரிக்கப் பயணம் தொடர்பாக பா.ஜ.க. எடுத்த நிலைப்பாட்டிற்கு எதிராக கர்நாடகாவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், ராகுல் காந்தி அமெரிக்கா சென்றபோது இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை சீர்குலைக்க விரும்பும் பிரபல தொழில் அதிபர் ஜார்ஜ் சோரஸுக்கு நெருக்கமானவர்களுடன் இணைந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

மேலும், வட அமெரிக்காவின் இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்த தன்சீம் அன்சாரி என்பவர், ராகுல் காந்தியின் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். அன்சாரிக்கு ஜமாத்-இ-இஸ்லாமி என்ற இஸ்லாமிய அமைப்புடன் தொடர்புள்ளது. தவிர, ராகுல் காந்தியின் அமெரிக்க பயணத்தின்போது சுனிதா விஸ்வநாத்தை சந்தித்தது உண்மையா என்பது பற்றி காங்கிரஸார் இன்னும் பதிலளிக்கவில்லை. ஏனெனில், தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸ் என்ன செய்ய விரும்புகிறார் என்பது ஒவ்வொரு இந்தியருக்கும் தெரியும்.

அப்படி இருக்க, ​​ராகுல் காந்தி ஏன் ஜார்ஜ் சோரஸால் நிதியுதவி பெற்றவர்களுடன் பழகுகிறார்? இது சோரஸ் மட்டுமல்ல என்பதும் தெளிவாகிறது. கர்நாடகாவில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் கூட ஜார்ஜ் சோரஸிடம் நிதியுதவி பெற்ற ஓபன் சொசைட்டி அறக்கட்டளையின் துணைத் தலைவர் பங்கேற்றது கண்டுபிடிக்கப்பட்டது” என்று கூறியிருக்கிறார்.


Share it if you like it