பழசை கிளறிய காங்கிரஸ்… பதிலடி கொடுக்கும் குஷ்பு!

பழசை கிளறிய காங்கிரஸ்… பதிலடி கொடுக்கும் குஷ்பு!

Share it if you like it

காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது போட்ட பழைய ட்விட்டை அக்கட்சியினர் வைரலாக்கி வரும் நிலையில், அதற்கு தகுந்த பதிலடி கொடுத்து வருகிறார் குஷ்பு. இதுதான் தற்போது சமூக வலைத்தளங்களில் பரபரப்பு விவாதமாகி இருக்கிறது.

நடிகை குஷ்பு கடந்த 2014-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அக்கட்சியில் தேசிய செய்தித் தொடர்பாளராக இருந்து வந்தார். கடந்த 2020-ம் ஆண்டு தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு அக்கட்சியிலிருந்து வெளியேறிய குஷ்பு, பின்னர் பா.ஜ.க.வில் இணைந்தார். கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராக இருந்து வரும் குஷ்பு, தற்போது தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராகவும் பதவி வகித்து வருகிறார். இந்த சூழலில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு, மோடி சமூகம் பற்றி பேசிய விவகாரத்தில் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. எனவே, அவரது எம்.பி. பதவியும் பறிக்கப்பட்டது.

இந்த நிலையில், ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனை மற்றும் தகுதி நீக்கம் தொடர்பாக கடந்த 24-ம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் சில கருத்துக்களை தெரிவித்திருந்தார் குஷ்பு. இதையடுத்து, அவர் காங்கிரஸ் கட்சியில் செய்தி தொடர்பாளராக இருந்தபோது, 2018-ம் ஆண்டு “மோடியின் பெயருக்கான அர்த்தத்தை ஊழல் என்று மாற்றுவோம்” என்று பதிவிட்டிருந்த பழைய ட்வீட்டை, காங்கிரஸ் கட்சியினர் தற்போது கையில் எடுத்திருக்கிறார்கள். இதுகுறித்து காங்கிரஸ் கட்சித் தலைவரும், ராஜ்யசபா எம்.பி.யுமான திக்விஜய் சிங், பிரதமர் நரேந்திர மோடியை டேக் செய்து, கடந்த 25-ம் தேதி காலை வெளியிட்ட தனது ட்விட்டர் பதிவில், “மோடி சமூகத்தை விமர்சித்த உங்கள் சீடர்களில் ஒருவரான குஷ்பு சுந்தர் மீதும் அவதூறு வழக்கு தொடர வைப்பீர்களா?” என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு பதிலளித்திருக்கும் குஷ்பு, “நான் அப்போது காங்கிரஸ் கட்சியில் இருந்தேன். காங்கிரஸ் செய்தித் தொடர்பாளராக மட்டுமே எனது கடமையைச் செய்தேன். நான் கட்சித் தலைவரை பின்தொடர்ந்தேன். இது அவருடைய மொழி. இதைத் தாண்டி வேறு எந்த நோக்கமும் எனக்கு இல்லை” என்று கூறியதோடு, “எனது டைம்லைனில் உள்ள எந்த ட்வீட்களையும் நான் ஒருபோதும் நீக்கியதில்லை. இப்போதும் நீக்க மாட்டேன்” என்று கூறியிருந்தார். எனினும் விடாத காங்கிரஸார், ‘மோடி’ என்ற குடும்பப் பெயரை இழிவுபடுத்தியது தவறு இல்லையா என்று கேள்வி எழுப்பினர். இதற்கு, “நான் ஊழல் என்ற வார்த்தையை மட்டுமே பயன்படுத்தினேன். ஆனால், ராகுல் எல்லா மோடிகளையும் திருடர்கள் என்று சொல்லும் அளவுக்கு கீழே இறங்கிவிட்டார்.

இதற்கான வித்தியாசத்தைக்கூட புரிந்துகொள்ள முடியாத நிலையில் காங்கிரஸ் கட்சி இருக்கிறது. அவர்களுக்கு தைரியம் இருந்தால், என் மீது வழக்குப் போடச் சொல்லுங்கள். நான் காங்கிரஸ் தலைவர்களுக்கு சவால் விடுகிறேன். அப்படி என் மீது வழக்கு போடப்பட்டால் அவர்களை நான் சட்டப்படி சந்திப்பேன்” என்று தெரிவித்திருக்கிறார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் என்.ராம் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள கருத்துக்கு பதிலளித்த குஷ்பு, “ஆமாம், எனது கருத்து நீண்ட காலத்திற்கு முன்பே மாறியிருந்தது. பின்னர், எனது நிலைப்பாட்டை சரிசெய்து கொண்டேன். அதனால்தான் நான் பா.ஜ.க.வில் சேர்ந்தேன்” என்று கூறியிருக்கிறார். இந்த விவகாரம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. பதிலுக்கு குஷ்புவும் பதிலடி கொடுத்துக் கொண்டே இருக்கிறார்.


Share it if you like it