சிறப்புக் கட்டுரை
கடந்த 2013-ம் ஆண்டு எந்த சட்ட நகலை ராகுல் காந்தி கிழித்து எறிந்தாரோ, அதே சட்டத்தால்தான் தற்போது பதவியை இழந்திருக்கிறார் என்பதுதான் ஹைலைட்.
இது பற்றி இக்கட்டுரையில் விரிவாகப் பார்ப்போம்…
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இடம்பெற்றிருக்கும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 8-வது பிரிவு என்ன சொல்கிறது என்றால், எம்.பி.க்கள் (மக்களவை மற்றும் மாநிலங்களவை), எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் குற்ற வழக்குகளில் 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் சிறைத் தண்டனை பெற்றால், அவர்கள் தகுதி இழப்பு செய்யப்படுவார்கள் என்கிறது. அதேபோல, போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபடுபவர்கள், தீவிரவாத செயல்களில் தொடர்புடையவர்கள், பலாத்காரம் உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான குற்றம், கடன் பிரச்னையால் திவாலானதாக அறிவிக்கப்பட்டவர்கள், தேசியக் கொடியை அவமதிப்பு செய்தவர்கள், வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், மக்களிடையே மத வேற்றுமையை தூண்டி கலவரம் ஏற்படுத்துபவர்கள், தேர்தலின்போது வாக்குச் சாவடிகளை கைப்பற்றுதல், வாக்குச் சீட்டுகளை அள்ளிச் செல்லுதல் போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் ஆகியோரும் தண்டனை பெற்றாலும் பதவியில் தொடர முடியாது என்று மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 8-ல் அடங்கியுள்ள (1), (2), (3) ஆகிய உட்பிரிவுகளில் கூறப்பட்டிருக்கிறது.
மேலும், தண்டனை பெற்றவர்கள், தண்டனை அறிவிக்கப்பட்ட அடுத்த நிமிடமே பதவியில் தொடர்வதற்கான தகுதியை இழப்பதோடு, தண்டனை முடிந்த பிறகும் அடுத்த 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடவும் முடியாது. ஆனால், தண்டனை பெற்றவர்கள் உடனே பதவியை இழக்காத வகையில் அதே 8-வது பிரிவிலுள்ள (4)-வது உட்பிரிவு பாதுகாத்து வந்தது. அதாவது, விசாரணை நீதிமன்றத்தால் தண்டனை அறிவிக்கப்பட்டதில் இருந்து 90 நாட்களுக்குள் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்தால், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவிகளை இழக்க மாட்டார்கள் என்று கூறுகிறது அந்த 4-வது உட்பிரிவு. இதனால், குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து பதவியில் நீடித்ததோடு, அனைத்து சுகங்களையும் அனுபவித்து வந்தனர். ஆகவே, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 8-வது பிரிவில் இருக்கும் 4-வது உட்பிரிவு, அரசியலமைப்புச் சட்டத்துக்கே விரோதமானது என்று அறிவிக்கக் கோரி, லில்லி தாமஸ், எஸ்.என்.சுக்லா ஆகியோர் கடந்த 2005-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், மனுதாரர்களின் கோரிக்கையை ஏற்று மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 8-வது பிரிவிலுள்ள 4-வது உட்பிரிவு அரசியலமைப்புச் சட்டத்துக்கே விரோதமானது என்றும், அந்த சட்டப்பிரிவு செல்லாது என்றும் 10.7.2013 அன்று தீர்ப்பளித்தது.
ஆனால், இத்தீர்ப்பு வந்த 5 மாதங்களில் காங்கிரஸ் அரசு புதிய சட்டத் திருத்தத்தை முன்மொழிந்தது. அதாவது, எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டாலும், பதவியில் தொடர்ந்து நீடிக்க வாய்ப்பளிக்கும் வகையில் இருந்தது. காங்கிரஸ் அரசு இச்சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தாலும், இதை ராகுல் காந்தி வெளிப்படையாகவே எதிர்த்தார். 2013 செப்டம்பர் 8-ம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, “தனிப்பட்ட முறையில் அரசு செய்வது தவறு என்று நினைக்கிறேன். இது ஒரு அரசியல் முடிவு, ஒவ்வொரு கட்சியும் சில நேரங்களில் இப்படிச் செய்ய வேண்டியிருக்கும். ஆனால், இது முட்டாள்தனமான முடிவு, இந்த முட்டாள் தனத்தை நிறுத்த நமக்கு இன்னும் நேரம் இருக்கிறது. உண்மையாகவே ஊழலை நிறுத்த விரும்பினால், இந்த சட்டத்திருத்தங்களை ஏற்க முடியாது. இந்த சட்ட திருத்தத்தைக் கிழித்துத் தூக்கி எறிய வேண்டும்” என்று ஆவேசமாகக் கூறியதோடு, அங்கேயே அவசரச் சட்ட நகலைக் கிழித்து எறிந்தார். எனவே, காங்கிரஸ் கட்சியும் அச்சட்டத் திருதத்தை வாபஸ் பெற்றது.
இந்த நிலையில்தான், கடந்த 2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது கர்நாடக மாநிலம் கோலாரில் பிரசாரம் செய்த ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடி, தொழிலதிபர்கள் நீரவ் மோடி, லலித் மோடி ஆகியோரை குறிப்பிட்டு, திருடர்கள் அனைவருக்கும் மோடி என்கிற பொதுவான குடும்பப் பெயர் இருப்பது எப்படி என்று கேள்வி எழுப்பி இருந்தார். இது ஒட்டுமொத்த மோடி சமுதாயத்தையும் அவமானப்படுத்துவது போல் இருப்பதாகக் கூறி, குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. புர்னேஷ் மோடி, சூரத் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், ராகுல் காந்தி குற்றவாளி என்று அறிவித்ததோடு, அவருக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனையும், 15,000 ரூபாய் அபராதமும் விதித்தது. இதையடுத்து, மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்டி ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, எந்த சட்டம் வேண்டாம் என்று சொல்லி அச்சட்டத் திருத்த நகலை ராகுல் காந்தி கிழித்து எறிந்தாரோ, அதே சட்டத்தால்தான் தற்போது தனது எம்.பி. பதவியை இழந்திருக்கிறார். தன் வினை தன்னைச் சுடும் என்பதுபோல, 10 ஆண்டுகளுக்கு முன்பு தனது 43 வயதில் ராகுல் காந்தி செய்த காரியம், தற்போது அவருக்கு எதிராகவே மாறி இருக்கிறது.
எஸ்.கார்த்திகேயன், மூத்த பத்திரிகையாளர்