ராகுல் காந்தி : அமெரிக்காவிலும் அதே அசடு !”

ராகுல் காந்தி : அமெரிக்காவிலும் அதே அசடு !”

Share it if you like it

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் ஒரு விசேஷ குணம் உண்டு. என்னவென்றால்: தனது சிறுபிள்ளைத்தனம், முதிர்ச்சியின்மை இரண்டையும் மேடை போட்டுக் காட்சிப் படுத்துவார். காங்கிரஸ் கட்சியும் அதைக் கொண்டாடும்.

சமீபத்தில் இதற்காகவே மூன்று நாட்கள் அமெரிக்கா சென்று வந்தார் ராகுல் காந்தி. சில பல்கலைக்கழக விவாத அரங்குகளில், வேறு சில இடங்களில், அவர் பேசினார். கேள்விகளுக்கும் பதிலளித்தார். அப்போது, பிரதமர் மோடி வழிநடத்தும் இந்திய அரசை அவர் பல வகையில் குறை சொன்னார். அங்கு அவர் பேசியவற்றில் இவையும் உண்டு:

“இந்தியாவில் சீக்கியர்கள் டர்பன் அணிவதற்குப் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்”. (ஓஹோ! மோடி மந்திரி சபையில் இருக்கும் அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி என்ற ஒரே சீக்கியர்தான் தற்போது இந்தியாவில் சுதந்திரமாக டர்பன் அணிகிறாரா?)

“இந்தியாவில் திறன்களை அழிப்பது அதிகம் நடந்துவருகிறது. அதை நிறுத்த வேண்டும். மேலும் திறன்களை வளர்க்க வேண்டும்.” (காங்கிரஸ் கட்சிக்குள் கூட சிறிதும் திறன் நுழையாமல் வளராமல் பார்த்துக் கொண்டது நீங்களும் உங்கள் அன்னையும்தானே, ராகுல்!)

“பல ஆண்டுகளாக பாஜக-வும் பிரதமர் மோடியும் மக்களிடையே பயத்தைப் பரப்பினார். ஆனால் 2024 தேர்தலுக்குப் பிறகு மக்களின் அச்ச உணர்வு மறைந்துவிட்டது” (காங்கிரஸ் இடம் பெற்ற ‘இண்டி’ கூட்டணிக்கு 2024 லோக் சபா தேர்தலில் மக்கள் பெரும்பான்மை அளிக்காதது, யார் மீதான அச்சத்தினால்?)

“நான் இந்தியாவில் 4000 கிலோமீட்டர் பாரத் ஜோடோ என்ற பெயரில் யாத்திரையாக நடந்தேன். காரணம், தொலைக் காட்சிகளும் மற்ற ஊடகமும் எங்கள் பேச்சுக்களை மக்களிடம் கொண்டு செல்லவில்லை. இந்தியாவில் அனைத்து தகவல் தொடர்பு சாதனங்களும் முடக்கப்பட்டன. இந்த நிலையில் நான் நேரடியாகச் சென்று மக்களைத் தொடர்பு கொண்டேன்” (அப்படியா? நீங்கள் யாத்திரை போகமலே, அமெரிக்காவில் இப்படிப் பேசியது எப்படி இந்திய ஊடகங்களில் வந்தது?)

“பிரதமர் மோடியை நான் உண்மையில் வெறுக்கவில்லை. அவர்மீது எனக்கு அனுதாபம்தான் ஏற்படுகிறது.” (“தேசத்தின் காவலாளி மோடி ஒரு திருடர்” என்று முன்பு நீங்கள் பேசிவந்தீர்கள். அவர் மீதான அனுதாபத்தை நீங்கள் எப்படியெல்லாம் வெளிப்படுத்தினீர்கள்! மெய் சிலிர்க்கிறதே, ராகுல்!)

“இந்தியா அனைத்து தரப்பினருக்கும் நியாயமான இடமாக மாறும்போது இடஒதுக்கீட்டை ரத்து செய்வது குறித்து காங்கிரஸ் கட்சி யோசிக்கும். இப்போது இந்தியா நியாயமான இடமாக இல்லை.” (சமத்துவத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் அமெரிக்க மண்ணிலிருந்து கருத்து சொல்லும்போது, இந்திய சட்டசபைகள் மற்றும் அரசு வேலைகளில் நீடித்து வரும் இட ஒதுக்கீட்டை நீங்கள் நியாயப் படுத்தத் தயங்கினீர்கள். ஆகையால், இந்தியாவை ‘நியாயமில்லாத நாடு’ என்று நீங்கள் வெட்கமில்லாமல் குறிப்பிட்டு, இட ஒதுக்கீட்டில் நமது அநேக அரசியல் தலைவர்கள் ஆடும் கபட நாடகத்தை மறைத்து விட்டீர்களே, ராகுல்!)

நாம் அடுத்த வீட்டில் இருக்கும்போது, நமது வீட்டில் உள்ளவர்களைப் பற்றி இழித்தும் பழித்தும் பேசலாமா? கூடாது. அது பண்பற்றது. அப்படிப் பேசுவதில் உண்மை இல்லை என்றால் நம் வீட்டிலேயே கூட அப்படிப் பேசுவது தவறு. அசட்டுத்தனமும் கெட்ட எண்ணமும் சேர்ந்த ராகுலுக்கு இது புரியாது.

ஒரு நாட்டின் செயல்பாடுகள், அங்கு ஆட்சியில் உள்ள தலைவரின் பேச்சுக்கள், மற்ற சில நாடுகளின் மீது தாக்கம் ஏற்படுத்துகின்றன என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது அந்த நாடுகளின் மக்களும் அதில் நாட்டம் கொள்ளலாம், அந்த விஷயம் பற்றிக் கருத்து சொல்லலாம். அதில்லை என்றால், ஒரு நாட்டுத் தலைவரின் பேச்சிலும் செயலிலும் மற்ற நாட்டு மக்களுக்கு என்ன ஆர்வம் இருக்கும்? அவருடைய நாட்டின் அரசியல் அக்கப்போரில் மற்ற நாட்டவர் வெட்டியாகக் கவனம் செலுத்துவார்களா?

இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளில் உள்ள எதிர்க் கட்சித் தலைவர்கள் இந்தியாவுக்கு வந்து அந்த அந்த நாட்டை ஆளும் மற்ற கட்சிகளைப் பற்றி விமரிசனம் செய்ய வந்தால் தில்லியிலும் ஹைதராபாத்திலும் சென்னையிலும் உள்ளவர்கள் அதில் ஆர்வம் காட்டுவார்களா? ராகுலுக்கு இது ஏன் பிடிபடவில்லை? அவர் சிறுபிள்ளைத்தனம் மிக்கவர், முதிர்ச்சியற்றவர், என்றுதானே அர்த்தம்?

சரி, ராகுல் காந்திதான் அறியாதவர். அமெரிக்காவில் இருப்பவர்கள் – அவர்கள் பிறப்பால் இந்தியத் தொடர்பு உள்ளவர்களோ அல்லது அமெரிக்கர்களோ – ஏன் அசட்டு ராகுல் பேச்சைக் கேட்க வருகிறார்கள்? காரணம் இருக்கிறது.

ராகுல் காந்தி அரசியலில் அறியாதவராக, விளையாட்டுப் பிள்ளையாக, கிட்டத்தட்ட ஒரு கோமாளியாகவே கூட இருப்பதால், அவர் எங்கும் அப்படிப் பேசுவதால், அவருக்கான பிராபல்யம் அப்படி இருக்கிறது. அவரை இளக்காரத்துடன் பார்த்து ரசிக்க, அப்படிப் பொழுது போக்க, வெளிநாட்டிலும் சிற்சில மனிதர்கள் வரத்தானே செய்வார்கள்? இது போக, பிரதமர் மோடியை எதிர்க்கும் சில வெளிநாட்டுச் சக்திகள், இந்தியா பெரிய அளவில் வளர்வதை விரும்பாத அந்த சக்திகள், அவர்கள் நோக்கத்திற்காக அசட்டு ராகுலை முடிந்தவரை இப்படியெல்லாம் கூட உபயோகித்துக் கொள்ளலாம், யார் கண்டது?

பிரதமர் மோடி ரஷ்யாவுக்குச் சென்று அதிபர் புடினுடன் பேசுகிறார். பிறகு உக்ரைனுக்குச் சென்று அந்த நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியுடனும் பேசுகிறார். இரு நாட்டுத் தலைவர்களும் அந்த நாட்டு மக்களும், உலகின் மற்ற நாடுகளும் கூட, மோடியின் இந்தச் செயலை உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள். ஏன்? அவர் இரண்டு அண்டை நாடுகளுக்குச் சென்று ராகுல் காந்தியையும் காங்கிரஸ் கட்சியையும் இடித்துப் பேசியதாலா? இல்லை, அந்த நாடுகளுக்கு இடையே நடந்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வரத் தன்னால் ஆனதை மோடி முயற்சிக்கிறார், அவர் முயற்சிக்கு உலகளவில் மதிப்பும் இருக்கிறது என்பதால் – முடிவு நம் கையில் இல்லை என்றாலும். ரெண்டாம் கிளாஸ் ராகுலுக்கு இதெல்லாம் பத்தாம் கிளாஸ் விஷயம்.

பாவமான ராகுல் காந்தி. பரிதாபமான அவர் கட்சி. இவரால், இவர் கட்சியின் லட்சணத்தால், பயனடைந்து அவரவர் வழியில் சுகிக்கும் அக் கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள். இதுதானே, ரத்தம் சிந்திய காலத்துக் காங்கிரஸின் இன்றைய அவல நிலை?

                           Author:
                R Veera Raghavan,     
                Advocate, Chennai

Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *