இந்தியாவை இழிவுப்படுத்திய கிறிஸ்தவ பாதிரியாரிடம் ராகுல் காந்தி உரையாடி இருக்கும் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் வயநாடு எம்.பி.யாக இருப்பவர் ராகுல் காந்தி. இவர், கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை (பாரத் ஜோடோ யாத்திரை) இந்திய ஒற்றுமை நடைபயணம் எனும் பெயரில் யாத்திரை செல்ல திட்டமிட்டு இருக்கிறார். அந்த வகையில், 150 நாட்களில் 3,500 கிலோ மீட்டர் தூரம் செல்ல இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
உண்மை என்னவெனில், ஐ.சி.யூ-வில் இருக்கும் காங்கிரஸ் கட்சியை மீட்கும் விதமாகவும், அடுத்த காங்கிரஸ் தலைவராக தாம் வரவேண்டும் என்பதற்காக ராகுல் காந்தி நடத்தும் திட்டமிட்ட நாடகம் என்பதே பல்வேறு அரசியல் நோக்கர்களின் ஒருமித்த கருத்தாக உள்ளது. சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல் என அனைத்திலும் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்து வருகின்றன. இதன் காரணமாக, காங்கிரஸை விட்டே பல மூத்த தலைவர்கள் வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை, சமாளிக்கும் விதமாக, ராகுல் காந்தி நடத்தும் நாடகமே இந்த ஒற்றுமை பயணம் என்பது பலரின் கூற்று.
இப்படிப்பட்ட சூழலில், கிறிஸ்தவ பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா என்பவரை ராகுல் காந்தி சந்தித்து உரையாடி இருப்பது பெரும் சர்ச்சையாக மாறி இருக்கிறது. கடந்த, ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் அருமனை பேரூராட்சியில் அமைந்துள்ள, சர்ச்சில் கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் ஒன்றினைந்து நிகழ்ச்சி ஒன்றை நடத்தினர். அதில், கலந்து கொண்ட ஜார்ஜ் பொன்னையா, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, நாகர்கோவில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. எம்.ஆர். காந்தி, பாரத மாதா மற்றும் பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டவர்களை மிகவும் தரம் தாழ்ந்த வகையில் விமர்சனம் செய்து இருந்தார். இதுதவிர, தி.மு.க.விற்கு கிடைத்த வெற்றி நாங்கள் போட்ட பிச்சை என்று தெரிவித்து இருந்தார்.
’பாரத மாதாவை’ மிகவும் இழிவாக பேசிய ஜார்ஜ் பொன்னையாவை உடனே கைது செய்ய வேண்டும் என்ற கோஷம் நாடு முழுவதும் எழுந்தது. இந்நிலையில், ஒட்டு மொத்த தேசத்தையே இழிவுப்படுத்திய ஜார்ஜ் பொன்னனையாவை தான், ராகுல் காந்தி நேற்றைய தினம் சந்தித்து உரையாடி அவரிடம் ஆசியும் பெற்று வந்து இருக்கிறார். இது, இந்திய ஒற்றுமைக்கான பயணமா? அல்லது பிரிவினை தூண்டிவிடும் நபர்களை சந்திக்கும் பயணமா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.