ராகுல் காந்தியின் அரைவேக்காட்டு அரசியல் – மக்களவைப் பேச்சில் வெளிச்சம் !

ராகுல் காந்தியின் அரைவேக்காட்டு அரசியல் – மக்களவைப் பேச்சில் வெளிச்சம் !

Share it if you like it

ராகுல் காந்தி எதை வேண்டுமானாலும் மற்றவரிடமிருந்து மறைக்கலாம் – தான் ஒரு அரைவேக்காடு என்பதைத் தவிர. சமீபத்தில் அவர் மக்களவையில் பேசும்போது அந்த விசேஷ அம்சம் அவரிடம் வெளிப்பட்டது.

தங்களை ஹிந்துக்கள் என்று அழைத்துக் கொள்பவர்கள் வெறுப்பிலும் வன்முறையிலும் ஈடுபடுகிறார்களா என்பது பற்றி மக்களவையில் ராகுல் காந்தி குழந்தைத்தனமாகப் பேசினார். பாஜக மற்றும் ஆர். எஸ். எஸ்-இல் உள்ளவர்கள், குறிப்பாக பிரதமர் மோடி, ஹிந்துக்களா என்பது பற்றியும் ராகுல் காந்தி அறிவீனமாகப் பேசினார். அவர்தான் இப்போது மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர்.

ராகுல் காந்தியின் பேச்சு பத்திரிகைகளில் வெளிவந்த பின், மக்களவை சபாநாயகர் அந்தப் பேச்சின் சில பகுதிகளை அவைக் குறிப்பிலிருந்து நீக்கிவிட்டார். அந்தப் பகுதிகளை இனி அப்படியே வெளியிடுவது சரியல்ல. இருந்தாலும் ராகுலின் பேச்சைப் பொதுவாகக் குறிப்பிட்டு யாரும் அவரை விமரிசிக்கலாம்.

இந்தியாவில் வாழும் ஒரு சிறுபான்மை மதத்தினரைக் குறிப்பிட்டு, “தங்களை இந்த மதத்தினர் என்று சொல்லிக் கொள்ளும் அவர்கள், நாள் முழுவதும் வெறுப்பிலும் வன்முறையிலும் ஈடுபடுகிறார்கள்” என்று ராகுல் காந்தி பாராளுமன்றத்திலோ பொதுவெளியிலோ பேச முடியுமா?

மேலே உள்ள கேள்விக்கு அர்த்தம் இது: நமது சிறுபான்மை மதத்தவர் பற்றி ராகுல் அப்படிப் பேசவேண்டாம், பேசக் கூடாது. அதே போல, தங்களை ‘ஹிந்துக்கள்’ என்று அழைத்துக் கொள்ளும் எவரையும் ராகுல் மரியாதையாகப் பேசவேண்டும், அவர்களைக் கீழ்த்தரமாக இகழக் கூடாது. ஆனால் அரைகுறை ராகுலுக்கு இது எப்போதும் புரிவதில்லை.

மக்களவை உறுப்பினர்களான பிரதமர் மோடி மற்றும் பல பாஜக-வினர் தாங்கள் ஹிந்துக்கள் என்பதில் பெருமை கொண்டவர்கள். பிற மதத்தவர்களுக்குத் தங்கள் மதம் பற்றியும் அப்படியான உணர்வு இருக்கும். அதுவும் புரிந்து கொள்ளக் கூடியது.

மோடியையும் பாஜக உறுப்பினர்கள் பலரையும் பார்த்து ராகுல் மக்களவையில் பேசிய சில வார்த்தைகள் அபாண்டமானவை, அவர்களின் மத உணர்வுகளைப் பெரிதும் காயப் படுத்துபவை. அந்தக் காட்சியை நேரலைத் தொலைக்காட்சியில் பார்த்தவர்களுக்கு, அவர் சொற்களைப் பத்திரிகைகளில் படித்தவர்களுக்கு, ஒரு குட்டிக் கதை ஞாபகத்துக்கு வரலாம்.

தாம் சிங்கம் என்று பெருமையுடன் அமர்ந்திருந்த பல சிங்கங்களுக்கு அருகில் வந்து நின்ற ஒரு கழுதைப்புலி, அவைகளை நோக்கிப் பேசியதாம்: “நீங்கள் எல்லாம் சிங்கங்களே இல்லை!”. அதைக் கேட்ட எல்லா சிங்கங்களும் கோபம் அடைவதை உணர்ந்த கழுதைப்புலி சொன்னதாம், “நான் உலகத்தில் உள்ள எல்லா சிங்கங்களையும் சொல்லவில்லை! என் முன்னால் உட்காரந்திருக்கும் சிலரைத்தான் சொல்கிறேன்! நீங்கள் மட்டுமே உலகத்தின் அனைத்து சிங்கங்களாக மாட்டீர்கள்!”

இந்தியாவில் ஹிந்து மதத்தவரை மட்டும், ஒரு ஹிந்துவே நேராகவும் மறைமுகமாகவும் கேலியும் கிண்டலும் செய்து பேசமுடியும். அப்படிப் பேசுபவர் ஒரு அரசியல் தலைவராக இருந்தால் அதனால் அவர் ஓட்டுக்களைப் பெரிதாக இழப்பதும் இல்லை. ராகுல் இதை உணர்ந்திருக்கிறார்.

ஹிந்துக்களை – அதுவும் அரசியல் தலைவர்களாக இருக்கும் பெருமிதமான ஹிந்துகளை – இகழ்ந்து பேசுவதால், முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ சிறுபான்மை மதத் தலைவர்களின் மதிப்பை அதிகம் பெறலாம் என்று ராகுல் காந்தி நம்புகிறார். அந்த மதத் தலைவர்களின் கட்டளைகள் மூலம், அந்த அந்த சிறுபான்மை மதங்களைச் சேர்ந்த அப்பாவி மக்கள் பலரின் ஓட்டுக்கள் தனது கட்சிக்குக் கிடைக்கும், பிறகு அடுத்த பிரதம மந்திரி தான்தான் என்ற நினைப்பு ராகுலை எப்படியும் பேச வைக்கிறது. அவரது அரைவேக்காட்டுத் தனமும் அவரை விடுவதாக இல்லை.

ராகுல் காந்தி இப்போது ஹிந்துக்களுக்கு ஒரு விஷயத்தை அழுத்தமாக உணர்த்தி இருக்கிறார். இந்தியாவில் வசிக்கும் ஹிந்துக்கள் மற்ற மதத்தவர்களிடம் நட்பாக, சாத்வீகமாக இருந்தால் மட்டும் போதாது. தமது நாட்டில் ஹிந்துக்கள் தழைப்பவர்களாகவும், அதற்குத் தேவையான தற்காப்பு மிக்கவர்களாகவும் இருப்பது அவசியம்.

இங்குள்ள இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதங்களைச் சேர்ந்தவர்களில் பெரும்பான்மை மக்கள் நல்ல தனி மனிதர்களாக, அப்பாவிகளாக இருக்கிறார்கள். ஆனாலும் அவர்களின் லகான் அந்த அந்த மதத் தலைவர்களின் கைகளில் இருக்கிறது. ஹிந்து மதத்தின் நிலைமை அப்படி இல்லை.

ஹிந்து மதத் தலைவர்கள், அரசியலில் யாரை எதிர்ப்பது, யாரை ஆதரிப்பது என்று ஹிந்துக்களுக்கு வழிகாட்டுவதில்லை, அதற்கான ரகசிய உத்தரவுகள் பிறப்பிப்பது இல்லை. அப்படியான வழிகாட்டுதலோ, உத்தரவோ வந்தாலும் ஹிந்துக்களிடம் அது செல்லுபடியாகாது. இதையும் ராகுல் உணர்ந்திருக்கிறார்.

நமது நாட்டில் ஹிந்து மதத்தைப் பெருமையுடன் பின்பற்றும் தலைவர்களைக் கொண்ட பாஜக-வுக்கு, அந்த இரண்டு மதங்களின் தலைவர்கள் பலர் எதிர்ப்பாக இருக்கிறார்கள். காரணம் ஊரறிந்தது. ஊழல் மற்றும் வாரிசு அரசியலில் திளைத்து, பாஜக-வை எதிர்த்து நிற்கும் பிற கட்சிகள் இயல்பாக அந்த சிறுபான்மை மதத் தலைவர்களின் தயவை நாடுகிறார்கள். இதில் இரு தரப்புக்கும் பரஸ்பரப் பலன்கள் இருக்கின்றன. ராகுல் காந்தியின் பேச்சுக்கு இதுவும் ஒரு பின்னணி.

ஹிந்துக்கள் சொந்த மண்ணில் தழைக்க, கௌரவத்துடன் நீடிக்க, அவர்கள் வழி தேடும் நாள் எப்போதோ வந்துவிட்டது. மு. க. ஸ்டாலின், ராகுல் காந்தி போன்றவர்கள் தங்கள் பேச்சில், செயலில், ஹிந்துக்களையும் மதித்து நடந்துகொண்டால் தான், சொந்த நாட்டில் ஹிந்துகளுக்கான அபாயம் மங்கியது என்று அர்த்தம். ராகுலின் ஆட்டத்தை மக்களவையில் பார்த்த பாஜக தலைவர்களுக்கு இது தெரியாமல் போகாது. அவர்களும் எல்லா விஷயத்தையும் இப்போது வெளியில் பேச முடியாது.

ஜைனம், புத்தம், சீக்கியம் போன்ற சிறுபான்மை மதங்களைச் சார்ந்தவர்கள் இந்தியாவில் இன்று ஹிந்துக்களோடு இணக்கமாக, மோதல்கள் மற்றும் மதமாற்ற சச்சரவுகள் இல்லாமல் வாழ்ந்து வருகிறார்கள். ஹிந்து மதத் தலைவர்களால், அவர்களின் செயல்பாட்டால், ஜைனர்கள், புத்தர்கள் மற்றும் சீக்கியர்களுக்குப் பிரச்சனை ஒன்றுமில்லை. அந்த மதத் தலைவர்களால் ஹிந்து மக்களுக்கும் பிரச்சனை ஏற்படுவதில்லை. இரு தரப்பிலும் நிம்மதி நிலவுகிறது. இப்போது ஒரு கேள்வி வருகிறது.

நமது நாட்டிலுள்ள இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதத் தலைவர்கள் பற்றி, அவர்களின் வெளிப்படையான மற்றும் மறைமுக செயல்பாடுகள் பற்றி, ஹிந்து மக்களும் ஹிந்து மதத் தலைவர்களும் அதே நிம்மதி உணர்வைப் பெற முடிகிறதா? தவிர்க்க முடியாத முக்கியக் கேள்வி அல்லவா இது?

இந்தியாவில் ஹிந்துக்களின் அமைதியான மகிழ்வான எதிர்காலத்தை நாம் கவலையுடன் பார்க்க வேண்டி இருக்கிறது. ராகுல் காந்தியின் மக்களவைப் பேச்சும் அந்தக் கவலைக்கு ஒரு புதிய காரணம். இருந்தாலும் நமக்கு ஒரு ஆறுதல் தென்படுகிறது.

தேச நலனைப் பிரதானமாகச் சிந்திப்பவர்கள், அபாரத் திறமைசாலிகள், மத்தியில் இப்போது கூட்டணியுடன் ஆட்சி செய்கிறார்கள். எந்த நிலையிலும் அவர்கள், அவர்களுக்குப் பின் வருகிறவர்கள், அர்ப்பணிப்புடன் செயல்படுவார்கள் என்று நாம் நம்பலாம். ஆகையால் இந்தியாவில் ஹிந்துக்களின் எதிர்காலம் பற்றி நாம் நம்பிக்கை கொள்ள இடமுண்டு. அப்படித் தானே நாம் காத்திருக்க வேண்டும்?

Author:
R Veera Raghavan,
Advocate, Chennai


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *