நாடு விடுதலை அடைந்த பின்னர் 4-வது முறையாக லோக்சபா சபாநாயகர் (மக்களவைத் தலைவர்) பதவிக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. இத்தேர்தலில் மக்களவை சபாநாயகர் பதவிக்கு ஆளுங்கட்சி சார்பில் ஓம் பிர்லாவும் எதிர்க்கட்சி சார்பில் கே.சுரேஸும் போட்டியிட்டனர். இந்நிலையில் பாஜக கூட்டணி வேட்பாளர் ஓம் பிர்லா வெற்றி பெற்றதாகவும் 18-வது லோக்சபா சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டதாகவும் தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மகதாப் அறிவித்தார்.
குரல் வாக்கெடுப்பு மூலம் சபாநாயகர் பதவிக்கான தேர்தல் நடத்தப்பட்டது. குரல் வாக்கெடுப்பின் முடிவில் பாஜக கூட்டணி வேட்பாளர் ஓம் பிர்லா, லோக்சபா சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக தற்காலிக சபாநாயகர் அறிவித்தார். இதற்கு எதிராக இந்தியா கூட்டணி எம்பிக்கள் முழக்கம் எழுப்பினர். பின்னர் பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர்கள் புதிய சபாநாயகர் ஓம் பிர்லாவை இருக்கைக்கு அழைத்துச் சென்று அமர வைத்து வாழ்த்துத் தெரிவித்தனர். பின்னர் பிரதமர் மோடி உள்ளிட்டோர் புதிய சபாநாயகர் ஓம் பிர்லாவை வாழ்த்திப் பேசினர். நாடு விடுதலைக்குப் பின்னர் நடைபெற்ற 4-வது சபாநாயகர் தேர்தல் இது. 1952, 1967 மற்றும் 1976 என 3 முறை சபாநாயகர் தேர்தல் நடைபெற்றது. 48 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது சபாநாயகர் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு லோக்சபாவின் முதலாவது கூட்டத்தில்தான் சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுவார். சபாநாயகர் இடைக்காலத்தில் பதவி விலகாதவரை 5 ஆண்டுகாலத்துக்கும் அப்பதவியில் ஒருவரே தொடர்ந்து நீடிப்பார். லோக்சபாவின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொறுப்பானவர் சபாநாயகர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் பேசுவதற்கு முன்பு முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி தேசிய நெருக்கடி நிலையை அறிவித்த நாளான ஜூன் 25 ஐ நினைவுபடுத்தி 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்வால் இண்டி கூட்டணியினர் என்ன செய்வதென்று தெரியாமல் பிரதமர் மோடி மேல் கோவப்பட்டு அந்த கோபத்தை வெளிக்காட்ட முடியாமல் திருடனுக்கு தேள் கொட்டியது போல் மௌனமாக இருந்தனர்.