அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், கேரள மாநிலம் வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி எம்.பி. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.
கடந்த 2019 மக்களவைத் தேர்தலின்போது, கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, “ஏன் அனைத்து திருடர்களும் மோடி என்கிற குடும்பப் பெயரையே கொண்டிருக்கிறார்கள். நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என்று எல்லா திருடர்களின் பெயர்களும் மோடி என்றே முடிவது ஏன்?” என்று விமர்சித்திருந்தார். இதையடுத்து, குஜராத்தைச் சேர்ந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. புர்னேஷ் மோடி, இதுகுறித்து சூரத் தலைமை நீதித்துறை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்குத் தொடர்ந்தார்.
சுமார் 4 ஆண்டுகள் நீடித்த இவ்வழக்கில் கடந்த 17-ம் தேதி இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்தது. இதையடுத்து, மார்ச் 23-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, சூரத் நீதித்துறை மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி ஹெச்.ஹெச்.வர்மா நேற்று தீர்ப்பு வழங்கினார். அதில், ராகுல் குற்றவாளி என்று அறிவித்த நீதிபதி, அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 15,000 ரூபாய் அபராதமும் விதிக்கபப்ட்டது. இதைத் தொடர்ந்து, ராகுல் காந்தியின் எம்.பி. பதவியை பறிக்க வேண்டும் பா.ஜ.க.வினர் வலியுறுத்தினர்.
மேலும், குற்றவியல் வழக்கில் 2 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் தண்டனை பெறுபவர்கள் மக்கள் பிரதிநிதியாக தொடர முடியாது. ஆகவே, ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்து நாடாளுமன்றச் செயலாளர் உத்தரவிட்டிருக்கிறார்.